Thalaivar 170 - சும்மா அள்ளுதே.. ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி - அமிதாப் பச்சன்.. ட்ரெண்டாகும் புகைப்படம்
சென்னை: Thalaivar 170 (தலைவர் 170) தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியும் அமிதாப் பச்சனும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு நிம்மதி கிடைத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படம்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஜெய்பீம் இயக்கு த.செ.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சில மாதங்களுக்கு முன்பு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு ஷூட்டிங்கும் தொடங்கியது. முதல் ஷெட்யூல் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. திருவனந்தபுரம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், இந்தப் படம் கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக பிரமாண்டமாக வெளியாகும் என்று கூறியிருந்தார்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஷயன், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் வழக்கம்போல இசையமைக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் அமிதாப் பச்சனும், முதன்முறையாக ஃபகத் பாசிலும் நடிக்கவிருக்கிறார்கள்.
ஷூட்டிங்: திருவனந்தபுரத்தில் தொடங்கிய ஷூட்டிங் அடுத்ததாக கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதனையடுத்து மும்பையில் ஷூட்டிங் நடந்து முடிந்திருக்கிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்கு அமிதாப் பச்சன் வந்த முதல் நாளில் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த், "33 ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய வழிகாட்டி, ஆளுமை அமிதாப் பச்சனுடன் என்னுடைஅய் 170ஆவது படத்தில் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது" என பதிவிட்டிருந்தார்.
புதிய புகைப்படம்: இதனையடுத்து அந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்திருந்த அமிதாப், நீங்கள்தான் எப்போதும் தலைவர் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தலைவர் 170 ஷூட்டிங்கில் ரஜினியும் அமிதாப்பும் இருக்கும் புதிய புகைப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதில் அமிதாப் பச்சன் கோட் சூட் அணிந்தபடி கையில் மொபைலுடன் சேரில் அமர்ந்திருக்க ரஜினிகாந்த் வாஞ்சையுடன் அவர் தோளில் கைவைத்தபடி இருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இரண்டு பேர் இருக்கும் ஒரு புகைப்படமே இவ்வளவு க்ளாஸாக இருக்கிறதே படத்தில் எப்படி இருக்கும் என மகிழ்ச்சியுடன் கமெண்ட்ஸ் செய்து இப்புகைப்படத்தை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











