அம்மாவை கொண்டாடும் உலகில்… அப்பாவின் பெருமையை பேசும் ‘ஃபாதர்’
சென்னை: திரையுலகில் தனித்துவமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து கவனம் ஈர்க்கும் இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில், RC Studios தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் "ஃபாதர்". பிரகாஷ் ராஜ் மற்றும் டார்லிங் கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
"குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்" திரைப்படத்தின் மூலம் திரையுலகின் கவனத்தை பெற்ற இயக்குநர் ராஜா மோகன், இந்த படத்தில் ஒரு தந்தையின் தியாகம், பெருமை, சொல்லப்படாத வலிகள் ஆகியவற்றை மையமாக வைத்து மனதை நெகிழ வைக்கும் கதையை உருவாக்கியுள்ளார். சமூகத்தில் தாய்மையின் பாசம், தியாகம் குறித்து அதிகம் பேசப்படுகிறது. ஆனால், தந்தையின் பாசம் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது. அப்பாவின் பாசம் மற்றும் வாழ்க்கை போராட்டங்களை இந்த படம் அழுத்தமாக பதிவு செய்கிறது.

ஃபாதர்: ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான உறவு, அவர்களின் வாழ்க்கை பயணம், அப்பாவின் பெருமை ஆகியவை கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய அழகான திரைக்கதையாக இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது. உணர்ச்சி, குடும்ப பாசம், வாழ்க்கை மதிப்புகள் ஆகியவை கலந்து, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவிக்கிறது.
விரைவில் இசைவெளியீட்டு விழா: மைசூர், பெங்களூர், குடகு உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. காட்சியமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கண்களை கவரும் வகையில் ஒளிப்பதிவாளர் சுகுணன் காட்சிகளை பதிவு செய்துள்ளார். "கப்சா" படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, RC Studios சார்பில் தயாரிப்பாளர் R. சந்துரு இந்த படத்தை மிகப் பெரிய அளவில், உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரித்து வருகிறார். தயாரிப்பில் யமுனா சந்திரசேகர் இணைந்துள்ளார்.
4 பாடல்கள்: இசையமைப்பாளர் நகுல் அப்யங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான தீம் மியூசிக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், விரைவில் இசை வெளியீடு நடைபெறவுள்ளது. தந்தை என்ற உறவின் ஆழத்தையும், சொல்லப்படாத உணர்வுகளையும் திரையில் நேர்த்தியாக பதிவு செய்யும் படமாக "ஃபாதர்" உருவாகி வருவதால், இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ரகுநாத் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











