வேட்டையன் படம் பார்க்க விடுமுறை.. இப்படியும் ஒரு அலுவலகமா?.. ஊழியர்கள் செம மகிழ்ச்சி
சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. கடந்த மாதம் பிரமாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. அதில் ரஜினிகாந்த் குட்டி கதை சொல்லி கலக்கினார். படத்தின் மீது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட ஆவல் எழுந்திருக்கிறது. கண்டிப்பாக ஜெயிலர் திரைப்படம் போல் இதுவும் பந்தயம் அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கிறது வேட்டையன் திரைப்படம். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, ரித்திகா சிங், விருமாண்டி அபிராமி, துஷாரா விஜயன் என பலர் நடித்திருக்கிறார்கள். முதன்முறையாக் ரஜினிகாந்த் ஞானவேலுவுடன் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதுதான் இப்போது தமிழ் திரைத்துறையின் ஒட்டுமொத்த பார்வையும் இருக்கிறது. லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.

படத்தின் டீசர்: படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில மாதங்களில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதனைப் பார்த்தபோதே இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாகத்தான் உருவாகுமோ என்று சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பினார்கள். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வேட்டையன் டீசரும் வெளியிடப்பட்டது. அதனைப் பார்க்கையில் இந்தப் படம் முழுக்க முழுக்க ஞானவேலுவின் ஸ்டைலில் இல்லாமல் ரஜினிக்காக கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருப்பது உறுதியானது.
கலவையான விமர்சனம்தான்: ஞானவேலுவின் இயக்கம் என்பதால் இது கண்டிப்பாக ஜெய் பீம் போன்ற தாக்கத்தை உருவாக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் படத்தின் டீசர் அந்த எதிர்பார்ப்பை கொஞ்சம் குறைத்திருக்கிறது என்றே பேச்சுக்கள் எழுந்தன. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ரஜினியின் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் பட்டையை கிளப்புவதாக ரசிகர்கள் உள்ளம் குளிர்ந்தனர்.
வேட்டையாடும் வேட்டையன்: படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. அதனையொட்டி ப்ரீ புக்கிங் தொடங்கி சக்கைப்போடு போட்டுவருகிறது படம். ப்ரீ புக்கிங்கிலேயே இப்படியான மாஸ் என்றால் முதல் நாளில் வசூலை பட்டையை கிளப்பி வேட்டையன் வேட்டையாடும் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது.மேலும் ப்ரீ புக்கிங்கில் கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸை பார்த்து படக்குழுவும் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பதாக விவரமறிந்தவர்களிடம் இருந்து தகவல்கள் வருகின்றன.
விடுமுறை: இந்நிலையில் வேட்டையன் படத்தை பார்ப்பதற்காக நாளை ஒரு அலுவலகம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை கொடுத்திருக்கிறது. அதன்படி HYSAS என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வேட்டையன் படத்துக்கான டிக்கெட்டையும் கொடுத்து விடுமுறையும் கொடுத்திருக்கிறது. இந்த நிறுவனம் தூத்துக்குடியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கம்பெனி மட்டுமில்லாமல் வேறு சில தனியார் நிறுவனங்களும் வேட்டையன் படத்துக்காக விடுமுறையை அறிவித்திருக்கிறது. முன்னதாக கபாலி, காலா ஆகிய படங்களுக்காகவும் சில நிறுவனங்கள் விடுமுறை விட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











