'தடுப்பூசி/சொட்டு மருந்துகள் பாம்புகளை விட விஷம் நிறைந்தவையா?'
தடுப்பூசி/ சொட்டு மருந்துகள் பாம்புகளை விட விஷம் நிறைந்தவை என பேசியிருக்கிறார் இயக்குனர் கோபி நயினார்.
உத்திர பிரதேசத்தில் பல குழந்தைகள் செத்ததற்கு மூலகாரணம் அம்மாநில சுகாதாரத் துறை எல்லா குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதில் காலம்காலமாக காட்டும் மெத்தனம் / தீண்டாமை. உத்திரபிரதேச அரசு தமிழக சுகாதாரத்துறையைப் போல குக்கிராமங்களுக்கெல்லாம் தடுப்பூசியை கொண்டுசென்று போட்டிருந்தால் குழந்தைகளுக்கு நோயும் வந்திருக்காது, மூச்சுத்திணறலினால் கொத்துக் கொத்தாகச் செத்திருக்கவும் மாட்டார்கள்.

அறம் திரைப்படத்தில் கூட தமிழக சுகாதாரத் துறை குக்கிராமங்களை அடைந்து சொட்டுமருந்து தருவதைக் காட்டியிருக்கிறார் அதன் இயக்குநர் கோபி. முன்பெல்லாம் எல்லா பள்ளிகளிலும் போலியோ பாதிக்கப்பட்ட இரண்டு மூன்று மாணவர்களாவது இருப்பார்கள். அவர்கள் புத்தகப்பைகளோடு தவழ்ந்து செல்வதையும், எப்போதும் ஈரமும், மூத்திரமுமாக இருக்கும் கழிவறைகளின் தரையில் அவர்கள் கைகளை ஊன்றி தேய்த்துத் தேய்த்து நகர்ந்து இயற்கை உபாதைகளைக் கழிக்க பெரும்பாடுபடுவதையும் பார்த்திருக்கிறோம். இப்போது சொட்டுமருந்தின் பயனால் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கிறது. இப்படி லட்சக்கணக்கான குழந்தைகளை பல நோய்களில் இருந்தும், கைகால் இழப்பில் இருந்தும் காப்பாற்றி வருவது தடுப்பூசிகளும் / சொட்டுமருந்துகளும்.
ஆனால் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை மீட்க கயிறு பத்தாது நவீன அறிவியல் உபகரணங்கள் வேண்டும் என தன் அறம் படத்தில் உரக்க குரல் எழுப்பியிருக்கும் கோபி, நோயில் இருந்து காக்க மட்டும் அறிவியல் வேண்டாம் என்கிறார்! அறிவியலை பாம்பின் விஷம் என்கிறார்! எவ்வளவு பெரிய அறியாமை!
ஆழ்துறை கிணற்றை மூடாமல் இருப்பது கவனமின்மை. இதுவரை அந்த கவனமின்மையால் பல நூறு குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். ஆனால் தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது குழந்தைகளுக்கு எதிரான பயங்கரவாதம், திட்டமிட்ட படுகொலை. இதை இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் பல லட்சம் குழந்தைகள் பாதிக்கப் போகிறார்கள், பல லட்சம் குழந்தைகள் கை/கால் இழக்கப்போகிறார்கள். படத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த தங்கையை அவளது அண்ணன் காப்பாற்றிவிட்டான். ஆனால் தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்ற சமூகவிரோதிகள் தோண்டிவைத்திருக்கும் அறியாமை எனும் ஆழ்துளை கிணற்றில் விழப்போகும் லட்சக்கணக்கான தம்பி, தங்கைகளை அரசுதான் காப்பாற்ற வேண்டும்.
கோபி நயினார் அவர்களே நீங்கள் மிகச்சிறந்த படைப்பாளி என்பதில் ஐயமில்லை. உங்களைப் போன்ற சமூகப் பொறுப்புள்ள இயக்குநர்களின் கலைப் படைப்புகளினால் இச்சமூகம் இன்னும் வேகமாக நடக்கப் போகிறது என நம்பிக்கொண்டிருந்த சூழலில், அதை முற்றிலும் முடமாக்கும் கருத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். பொழுதுபோக்குப் படங்களை எடுக்கும் படைப்பாளிகளைவிட மக்களுக்காக அரசியல் படங்கள் எடுக்கும் படைப்பாளிகளுக்கு பொறுப்பு அதிகம். உங்களைப் போன்றவர்கள் அறியாமையை நீக்குகின்றவர்களாக இருக்கவேண்டுமே தவிர அறியாமையை பரப்புகின்றவர்களாக இருக்கக் கூடாது. தயவுசெய்து கம்யூனிசத்தை மட்டுமல்ல, அறிவியலையும் படியுங்கள். கார்ல் மார்க்ஸும் அதைத்தான் விரும்புவார். ஏனெனில் அறியாமையை பரப்புவதைவிடவும் ஒரு அறமற்ற செயல் இச்சமூகத்தில் ஏதுமில்லை.
-டான் அசோக்


Click it and Unblock the Notifications











