கிராபிக்ஸ் மிரட்டல்...அடுத்த படத்திற்கு தயாராகும் ஏ.ஆர்.முருகதாஸ்
சென்னை : அஜித் நடித்த பிளாக்பஸ்டர் படமான தீனா படத்தின் மூலம் டைரக்டராக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். பல படங்களுக்கு திரைக்கதை மட்டும் எழுதி உள்ளார்.
வித்தியாசமான கதைகளை, அதே சமயம் அழுத்தமான சோஷியல் மெசேஜ் உடன் சொல்லும் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் முருகதாஸ். இவர் கடைசியாக 2020 ல் ரஜினி போலீசாக நடித்த தர்பார் படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து ராங்கி என்ற படத்திற்காக கதை எழுதினார். ஆனால் அந்த படம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

வேலைகளை துவங்கிய முருகதாஸ்
இந்நிலையில் தான் அடுத்து எப்போது படம் இயக்க போகிறேன், யாரை வைத்து இயக்க போகிறேன் என்ற அறிவிப்பு ஏதும் வெளியிடாமல் மெளனம் காத்து வந்தார் முருகதாஸ். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலின் படி, தான் அடுத்து இயக்க போகும் படத்திற்கான கிராபிக் வேலைகளை துவக்கி விட்டாராம் முருகதாஸ்.

பான் இந்தியன் படம்
முருகதாசின் அடுத்த படம் பான் இந்தியன் படமாக உருவாக போகிறதாம். இதில் இந்திய சினிமாவின் பல பிரபலமான நடிகர்களை நடிக்க வைக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளாராம். த்ரில்லர் படமாக இதில், நிறைய கிராபிக் காட்சிகள் அமைக்கப்பட உள்ளதாம்.

தமிழுக்கு வரும் விஎஃப்எக்ஸ் ஸ்டூடியோ
அதே சமயம் இந்தியில் ஒரு சில படங்களை தயாரித்த பிரபலமான விஎஃப்எக்ஸ் ஸ்டூடியோ, தற்போது தமிழ் சினிமாவில் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளதாம். மிகப் பெரிய பட்ஜெட்டில் தமிழ் ஒரு படத்தை தயாரிக்க விஎஃப்எக்ஸ் ஸ்டூடியோ திட்டமிட்டுள்ளதாம். முருகதாஸ் இயக்க போகும் படத்தை தான் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

2022 ல் பிரம்மாண்ட படம்
2022 ம் ஆண்டின் துவக்கத்தில் முருகதாஸ் இயக்கும் புதிய பிரம்மாண்ட படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். ஷுட்டிங் துவங்குவதற்கு முன் படத்தில் நடிக்க போகும் நடிகர் - நடிகைகள் உள்ளிட்ட படக்குழு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.

தோல்வி அடைந்த தர்பார்
முருகதாஸ் கடைசியாக இயக்கிய தர்பார் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. அதே சமயம் அதற்கு முன் விஜய்யை வைத்து இயக்கிய சர்கார் படம் சமூகத்தில் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அரசியல் ரீதியாக பல எதிர்ப்புக்களையும், சிக்கல்களையும் சந்தித்தது இந்த படம்.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு
சர்கார் படத்திற்கு முன் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படமும் மிகப் பெரிய தோல்வி அடைந்தது. அதனால் முந்தைய படங்களின் தோல்விகள், பிரச்சனைகளில் இருந்து மீண்டும் வரும் விதமாக முருகதாசின் அடுத்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முருகதாஸ் அடுத்து யாரை இயக்க போகிறார் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











