யப்பா ஏ.ஆர்.முருகதாஸ் குடும்பத்தோடு இந்த ஆட்டம் போடுறாரே.. செம குஷில இருக்காரு
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கிவருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த சில வருடங்களாகவே ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார் முருகதாஸ். எனவே எஸ்கேவை வைத்து அவர் இயக்கிவரும் இப்படத்தின் மூலம் பந்தயம் அடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் முருகதாஸ். இந்தச் சூழலில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் தீனா. எஸ்.ஜே.சூர்யவிடம் உதவி இயக்குநராக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் அஜித்துடன் சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம்தான் அஜித்தை ஆக்ஷன் படங்களில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. இதுவரை அஜித்தின் படங்களில் வந்த அவரது அறிமுக காட்சிகளில் தீனா படத்திற்கு எப்போதும் தனியிடம் உண்டு.
டாப் இயக்குநர்: முதல் படம் மெகா ஹிட்டான பிறகு விஜயகாந்த்தை வைத்து ரமணா படத்தை இயக்கினார். முதல் படத்தில் கமர்ஷியலாக களமிறங்கிய முருகதாஸ் இரண்டாவது படத்தில் சமூக அக்கறையுடன் களமிறங்கினார். லஞ்சத்திற்கு எதிராக போராடும் ஒரு பேராசியரை வைத்து கோலிவுட்டை கலக்கினார் முருகதாஸ். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக அதுவரை ஆக்ஷன் ஹீரோவாகவே வலம் வந்த விஜயகாந்த் அந்தப் படத்தில் பக்குவமாக அடக்கி வாசித்திருப்பார்.

முருகதாஸின் கஜினி: முதல் இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் முன்னணி இயக்குநராக மாறிவிட்டார் முருகதாஸ். தொடர்ந்து சூர்யாவை வைத்து அவர் இயக்கிய கஜினி படமும் மெகா ஹிட்டாக அந்தப் படம் ஹிந்தியில் ரீமேக்கானது. அமீர்கான் நடித்திருந்த கஜினி ஹிந்தி ரீமேக்கையும் முருகதாஸே இயக்கினார். பாலிவுட்டிலும் கஜினி ஹிட்டடிக்க இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறிவிட்டார் முருகதாஸ். தொடர்ந்து அவர் தமிழில் இயக்கிய ஏழாம் அறிவு படமும் ஹிட்டானது.
துப்பாக்கி, கத்தி: விஜய் தொடர் தோல்விகளில் துவண்டிருந்தபோது அவருக்கு பக்கா கமர்ஷியல் ஹிட் கொடுத்தது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி. அதுவரை விஜய்யை யாரும் அவ்வளவு ஸ்டைலிஷாக பார்த்ததில்லை என்ற பெயரை துப்பாக்கி பெற்றுக்கொடுத்தது. அதேபோல் விஜய்யுடன் இரண்டாவது முறை இணைந்த கத்தி படமும் மெகா ஹிட்டாக; மூன்றாவதாக இணைந்த சர்கார் அடிவாங்கியது. தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அதில் ரஜினியின் தர்பாரும் அடக்கம்.
மதராஸி: முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கிவருகிறார். சமீபத்தில்தான் சென்னை எல்ஐசி கட்டடம் இருக்கும் பகுதியில் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தது. வரிசையாக தன்னை தொடர்ந்துகொண்டிருக்கும் தோல்விகளுக்கு இந்தப் படத்தின் மூலம் பதிலடி தர காத்திருக்கிறார் என அவரது ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
குடும்பத்துடன் ஆட்டம்: அதாவது ஒரு விழாவில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார் முருகதாஸ். அப்போது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கன்னிமா பாடல் ஒலிக்கப்பட்டது. அதனை கேட்டு வைபான முருகதாஸும் அவரது குடும்பத்தினரும் சூப்பராக நடனம் ஆடினார்கள். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் யப்பா செம ஆட்டம் போடுறாரே. ஏ.ஆர்.முருகதாஸ் பயங்கர குஷியில் இருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்து அதிகம் ஷேர் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











