அடுத்தப் படத்தில்... தெலுங்கு ஹீரோவை தமிழில் அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சென்னை: தர்பார் படத்தை முடித்துள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து தெலுங்கு ஹீரோ நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம், தர்பார். இதில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, ஶ்ரீமன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

சிறுத்தை சிவா
படம் கடந்த மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதிலும் நயன்தாரா நடிக்கிறார். குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரஜினியின் எந்திரன், பேட்ட படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார்.

அல்லு அர்ஜுன்
இதற்கிடையே, தர்பாரை அடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவரிடம் கதை சொல்லிவிட்டு வந்துள்ளார் முருகதாஸ். கதையை கேட்ட அவர், நன்றாக இருக்கிறது. படம் பண்ணலாம் என்று தெரிவித்துள்ளாராம்.

சூப்பர் ஹிட்
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான 'அலா வைகுந்தபுரம்லோ' என்ற படம் கடந்த மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயின். ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். த்ரிவிக்ரம் இயக்கிய இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து சுகுமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன்.

தமிழில் அறிமுகம்
இந்தப் படத்தை முடித்துவிட்டு முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அல்லு அர்ஜுன் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த ஸ்டாலின் படத்தை இயக்கியுள்ளார். மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கியுள்ளார்.
அல்லு அர்ஜூனை தமிழில் இயக்குனர் லிங்குசாமி அறிமுகப்படுத்த இருப்பதாக கடந்த சில வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











