Maamannan - மாமன்னனில் நடித்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்.. சீக்ரெட் சொன்ன மாரி செல்வராஜ்
சென்னை: Maamannan (மாமன்னன்) மாமன்னன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் நடித்திருப்பதாக மாரி செல்வராஜ் கூறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அடுத்ததாக கர்ணன் படத்தை இயக்கினார். இரண்டு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.மூன்றாவது படமாக உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

நாளை ரிலீஸ்: உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதாலும் பரியேறும் பெருமாள் என்ற தரமான படைப்பை கொடுத்த இயக்குநரின் படம் என்பதாலும் மாமன்னன் படத்தின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. நாளை திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி டிக்கெட் புக்கிங்கும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நிச்சயம் இந்தப் படம் தமிழ் சினிமாவில் சிறந்த படமாக இருக்கும் என்ற எண்ணமே பலரிடம் இருக்கிறது.
சூப்பர் பாடல்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் வளர்ந்து வரும் இயக்குநர்கள் இயக்கும் படத்துக்கு இசையமைக்கமாட்டார் என்ற பிம்பமும் மாமன்னன் மூலம் உடைந்திருக்கிறது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் லைக்ஸை அள்ளியிருக்கின்றன.
வடிவேலுவும் ரஹ்மானின் இசையில் பாடிய பாடல் அட்டகாசமாக அமைந்தன. அதேபோல் ஜிகு ஜிகு ரயில் பாடல் சென்சேஷனல் ஆனது. அதற்கு காரணம் அந்தப் பாட்டின் லிரிக்கல் வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் நடனமும் ஆடியிருந்தார்.
படத்தில் நடித்திருக்கிறார்: இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், "12 வயதிலிருந்தே கீபோர்டு முன்பு அமர்ந்திருக்கிறேன். மேடைக்கு வந்தாலும் அமர்ந்தே இருக்கிறேன். அப்படியே வாழ்க்கை போய்விட்டது. அதனால்தான் ஒரு உடற்பயிற்சிபோல நினைத்து அந்தப் பாடலில் ஆடியிருக்கிறேன். என்னை ஆட வைத்தது சாண்டி மாஸ்டர்தான்" என்றார் ஜாலியாக.
மாரி செல்வராஜ் பேட்டி: ஏ.ஆர்.ரஹ்மான் நடனம் ஆடியது தொடர்பாக பேசிய மாரி செல்வராஜ், "ரஹ்மான் ஆடியதை ரெக்கார்ட் செய்து உதயநிதிக்கு அனுப்பினேன். அவர் அதனை பார்த்துவிட்டு ரொம்பவே ஆச்சரியப்பட்டார். அதேபோல் மாமன்னன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நடித்திருக்கிறார். அவர்தான் ஸ்க்ரீனிலும் வருவார்" என்றார்.
இதனை பார்த்த ரசிகர்கள் மாமன்னனில் ஏ.ஆர்.ரஹ்மான் நடித்திருக்கிறாரா என்று ஆச்சரியமடைந்துள்ளனர். அதேசமயம் நடித்திருக்கிறாரா இல்லை ஜிகு ஜிகு ரயில் பாடலுக்கு மட்டும் தோன்றுவாரா என்பதை நாளை படம் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துவருகின்றனர்.
படத்துக்கு மிரட்டல்: இதற்கிடையே மாமன்னன் படத்துக்கு சிக்கல்களும் எழ ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படத்தை திரையிட்டால் தாக்குதல் நடத்துவோம் என அகில இந்திய ஃபார்வேர்டு ப்ளாக் கட்சி தேனி வெற்றி திரையரங்கை மிரட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











