ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டைவர்ஸ்.. அறிவித்தார் மனைவி.. இந்திய திரையுலகில் உச்சக்கட்ட அதிர்ச்சி
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் புகழ் பெற்றவர். 90களில் சினிமா துறைக்கு வந்தவர் இன்றளவும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரியவிருக்கிறார்கள். அதனை சைரா பானுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது இசையாலும் தனது நடவடிக்கையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஈகோ இல்லாத இசைப்புயல்: இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருது, அதேபோல் கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருதுகள் என உலகத்தின் புகழுடைய உச்சிக்கு சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அவரது நடவடிக்கையும், பேச்சும் மிக மிக இயல்பாகவே இருக்கும். அதேபோல் எந்த ஈகோவும் காட்டாமல் பழகும் அவர் தனது மனதில் பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லும் வித்தையை தெரிந்தவர் என்பதை அவர் பல முறை நிரூபித்திருக்கிறார்.
பிஸி ஏ.ஆர்.ரஹ்மான்: கடந்த வருடம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த பத்து தல படம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படங்கள் கடந்த வருடம் வெளியாகின. படத்தில் அவரது இசையமைப்பில் உருவான அத்தனை பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னணி இசையும் உயர் தரத்தில் இருந்ததாக ரசிகர்கள் கூறினர்.
பெரியோனே ரஹ்மானே: கடைசியாக அவரது இசையமைப்பில் அயலான், ஆடு ஜீவிதம், லால் சலாம், ராயன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. குறிப்பாக ஆடுஜீவிதம் திரைப்படத்தில் பெரியோனே ரகுமானே பாடல் அவ்வளவு கொண்டாடப்பட்டது. அடுத்ததாக அவரது இசையில் தக் லைஃப் படம் வரவிருக்கிறது.
திருமணம்: இதற்கிடையே அவர் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அவ்வளவு காதலோடு தங்களது திருமண வாழ்க்கையை நகர்த்தி சென்றார்கள். அவர்களுக்கு கதிஜா என்ற மகளும், அமீன் என்ற மகனும் இருக்கிறார்கள். கதிஜாவும், அமீனும் இசை துறையில் தங்களது திறமையை நிரூபித்துவருகிறார்கள்.
டைவர்ஸ்: இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு ரஹ்மானிடமிருந்து பிரிவதாக அறிவித்திருக்கிறார். அவர் தரப்பிலிருந்து வெளியிட்டிருந்த அறிக்கையில், "திருமணமாகி பல வருடங்கள் கழித்து நான் ரஹ்மானை பிரிந்து செல்வது கடினமான முடிவுதான். இத்தனை வருடங்கள் வாழ்க்கையை நகர்த்திய பிறகு சமீபகாலமாக எங்களுக்குள் வலியும் கவலையும் அதிகமாகின. பதற்றங்கள் உருவாகி ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியிருக்கின்றன. அந்த இடைவெளியை நிரப்ப எங்களால் முடியவில்லை. மிக கடுமையான மன வலியில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











