அவளிடம் சண்டையிட முடியாது.. எனக்கு தகுதியில்லை.. பெர்சனல் குறித்து மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. படத்தின் முதல் சிங்கிளான ஜிங்குச்சா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுபோலவே படத்தின் மற்ற பாடல்களும் சூப்பர் வரவேற்பை பெறும் என்றே பலரும் கூறிவருகிறார்கள். இதற்கிடையே அவர் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இசைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஃபேமஸான அவர் ஆஸ்கர் விருதுகள், கிராமி விருதுகள் என ஏகப்பட்ட விருதுகளை அள்ளியிருக்கிறார். எத்தனை விருதுகள் வென்றாலும் தலைக்கனம் ஏதுமின்றி தான் உண்டு தனது வேலையுண்டு என்ற நிலையிலிருந்து தவறாமல் இருப்பவர் அவர். இதனால்கூட அவருக்கென்று ரசிகர்கள் தனியாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படம்: அவரது இசையமைப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. அதில் இடம்பெற்ற பாடல்களும் பின்னணி இசையும் பட்டையை கிளப்பின. அடுத்ததாக மணிரத்னம் இயக்கியிருக்கும் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸாகவிருக்கிறது. இதிலிருந்து சமீபத்திதான் ஜிங்குச்சா என்கிற முதல் சிங்கிள் வெளியானது. மணி - ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் திருமண விழா தொடர்பான பாடல்கள் (யாரோ யாரடி, சாரட்டு வண்டில) க்ளாசிக்காக மாறி கொண்டாடப்படும். அந்தவகையில் இந்தப் பாடலும் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்படுகிறது.
மனைவியை பிரிந்த ரஹ்மான்: இதற்கிடையே திரைத்துறையை பொறுத்தவரை மிஸ்டர் க்ளீன் இமேஜ் உடையவர் ரஹ்மான். எந்தவிதமான சர்ச்சைகள், கிசுகிசுக்கள் என எதிலும் சிக்காமல் இசை சேவை செய்துகொண்டிருக்கும் அவரை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தார். அதனை ரஹ்மானும் உறுதிப்படுத்தினார். இத்தனை வருடங்கள் கழித்து எதற்காக விவாகரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கேள்விகளை எழுப்பினார்கள். மேலும் வழக்கம் போல் தங்கள் இஷ்டத்துக்கு பலரும் கதை கட்ட தொடங்கினார்கள்.

இன்னும் விவாகரத்து இல்லை: ஆனால் அப்படி இட்டுக்கட்டப்பட்ட கதைகளுக்கு ரஹ்மானின் மனைவி சாய்ரா தரமான பதிலடி கொடுத்தார். சமீபத்தில்கூட அவர், 'ரஹ்மானிடமிருந்து இன்னும் நான் சட்டப்பூர்வமாக பிரியவில்லை. எனவே என்னை அவரது முன்னாள் மனைவி என அழைக்காதீர்கள்' என்று சொல்லியிருந்தார். அதேபோல் சமீபத்தில் சாய்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும்; அப்போது ரஹ்மான்தான் உடனிருந்து பார்த்துக்கொண்டதாகவும் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மகள் சர்ச்சை: முன்னதாக சில வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்களில் ஒருவரான கதீஜாவின் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் அவர் ஹிஜாப் அணிந்திருந்தார். அதனை பார்த்த ஒருதரப்பினர் ரஹ்மானை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அவர்களுக்கு மகள் பதிலளித்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான் தனது மகள் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
ரஹ்மானின் பேட்டி: அந்தப் பேட்டியில் அவர், "பொது வாழ்க்கையை ஒருவர் தேர்ந்தெடுப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். பணக்காரனிலிருந்து கடவுள்வரை அனைவருமே விமர்சிக்கத்தான் படுகிறார்கள். ஒற்றுமையாக, ஆணவம் இல்லாமல் மற்றவர்களை கஷ்டப்படுத்தாமல் இருந்தால் போதும். எனது மகளுக்காக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவளுடன் சண்டையிடுவதற்குகூட எனக்கு தகுதியில்லை. இரண்டு பக்க மெயில்களானாலும் சரி அதை மிகவும் அருமையாக எழுதி அனுப்புவாள் அவள். அதை நான் வியந்து பார்ப்பேன்" என்றார். கதீஜா மின்மினி என்ற படத்துக்கு இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











