ராயன் அப்டேட்.. புயல் வருது.. பின்னணி இசையை முடித்த ஏ.ஆர்.ரஹ்மான்.. செம மாஸ்
சென்னை: தனுஷ் இப்போது தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அவருடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா, துஷாரா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது. படமானது அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இரண்டு சிங்கிள்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. நிலைமை இப்படி இருக்க படத்தின் பின்னணி இசை பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் முடித்திருக்கிறார்.
இந்திய சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் தனுஷ். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் நடிப்பில் ஸ்கோர் செய்யும் அவர் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் வெற்றி பெறவில்லை. அந்தப் படத்துக்கு முன்னதாக வெளியான வாத்தி படமும் தனுஷுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறார் தனுஷ்.

ராயன்: இந்தச் சூழலில் தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார் அவர். இதில் அவருடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் ஏற்கனவே இயக்கிய பவர் பாண்டி படம் மெகா ஹிட்டானது. எனவே இந்தப் படமும் கண்டிப்பாக ஹிட்டாகி தனுஷை வெற்றி பாதைக்கு அழைத்து வரும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
என்ன கதை: வடசென்னையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ், சந்தீப், காளிதாஸ் உள்ளிட்டோர் இருந்தனர். இப்படத்தில் தனுஷ் ஒரு தாதாவாக நடிக்கிறார் என்றும்; தனது குடும்பத்தை கொன்றவர்களை பழிவாங்குவதுதான் ஒன்லைன் என்றும் திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. பவர் பாண்டியின் திரைக்கதை அருமையாக இருந்ததால் கண்டிப்பாக ராயன் திரைக்கதை மூலம் தனுஷ் மேஜிக் செய்வார் என்று அவர் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
இரண்டு சிங்கிள்கள்: படமானது அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. படத்திலிருந்து இரண்டு சிங்கிள்கள் சமீபத்தில் வெளியாகின. இரண்டு பாடல்களுமே ரசிகர்களிடம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருக்கின்றன. அதிலும் கடைசியாக வெளியான வாட்டர் பாக்கெட் பாடல் கானா ஜானரில் வெளியானது. அதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை கேட்ட ரசிகர்கள், அட இப்படி ரஹ்மான் இப்படி ஒரு கானா பாட்டு போட்டு பல காலம் ஆகிடுச்சே என்று கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி இசை: இதற்கிடையே படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை மாதத்துக்கு தள்ளிப்போனதாக நேற்று ஒரு தகவல் பரவியது. ஆனால் அப்படி எதுவும் இல்லை திட்டமிட்டபடி ஜூனில் படம் ரிலீஸ் என்று உறுதியாக கூறுகிறார்கள் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள். இந்நிலையில் ராயன் படத்தின் பின்னணி இசை பணியை ஏ.ஆர்.ரஹ்மான் முடித்திருக்கிறார். ரஹ்மான் அந்தப் பணியில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, 'புயல் வருது''என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த ட்வீட் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்தப் படத்துக்கு பிறகு தனுஷின் நடிப்பில் குபேரா, இளையராஜாவின் பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக படங்கள் வெளியாகவிருக்கின்றன குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











