மதத்தின் பெயரில் வன்முறை தவறு.. இசை மேடையே எனக்கு புனித தலம்.. ரஹ்மான் பேட்டி!
சென்னை: உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக இருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான், அண்மையில் அவர் அளித்த பேட்டியில், மதம், ஆன்மிகம் மற்றும் மனிதநேயம் குறித்து ஆழமான கருத்துகளை பேசி உள்ளார். இந்திய இசை துறையை உலக மேடைக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமையை பெற்ற ரஹ்மான், எப்போதும் தனக்கென ஒரு அமைதியான, ஆன்மீகமான அணுகுமுறையை பின் பற்றக்கூடியவராக இருக்கிறார்.

1990களில் ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்து, உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். ''Slumdog Millionaire'' படத்திற்கு இசையமைத்து ஆஸ்கர் விருது பெற்ற முதலாவது இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமைக்குவர் ஏஆர்.ரஹ்மான். இவர், KM Music Conservatory எனும் சர்வதேச தரமான இசைக் கல்லூரியை உருவாக்கி, இளம் திறமையாளர்களை உலக மேடைக்கு கொண்டு செல்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான்: அண்மையில் ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், மதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதில் அளித்த ரஹ்மான். "நான் அனைத்து மதங்களின் ரசிகன். இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய எல்லா மதங்களையும் நான் படித்து அறிந்தவன். எந்த மதத்தின் பெயரிலும் வன்முறைக்கு இடமில்லை. மனிதரை காயப்படுத்துவது மிகப் பெரிய பாவம். நான் இசையை உருவாக்கும்போது அது மக்களை இணைக்க வேண்டும், மகிழ்விக்க வேண்டும் என்பதே என் நோக்கம், நான் இசை நிகழ்ச்சியை நடத்தும் போது, ஒரு கச்சேரி மேடையில் நிற்கும் போது, அது எனக்கு ஒரு புனித தளம் போல உணர்வேன். அங்கு நான் இசையால் மக்களுடன் இணைகிறேன் என்றார்.
அகந்தையை அழிக்க வேண்டும்: தொடர்ந்து, பேசிய ஏ.ஆர் ரஹ்மான், "மக்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும், விவேகத்துடன், சுத்தமான நம்பிக்கையுடன் வாழ வேண்டும். மனதுக்கும் ஆன்மாவுக்கும் செழிப்பு கிடைத்தால் மட்டுமே வாழ்வின் இலக்குகளை எளிதாக அடைய முடியும்" என அவர் வலியுறுத்தினார். "சூபி தத்துவம் என்பது அகந்தையை அழிக்கும் ஒரு பயணம்-நம்மை நாமே சுயபரிசோதனை செய்யும் ஒரு கண்ணாடி. இறப்பதற்கு முன்பே, பழைய 'நான்' என்பதைக் கரைத்துவிடும் தத்துவம் அது என்று ஏ.ஆர்.ரஹ்மான் அந்த பேட்டியில் பல விஷயத்தை பற்றி பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











