ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து.. அவரது பலவீனமான அத்தியாயம்.. விளக்கம் கொடுத்த இசை புயல்
சென்னை: உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இரண்டு ஆஸ்கர்கள், கோல்டன் குளோப் விருதுகளை வென்றிருக்கிறார். கடைசியாக அவரது இசையமைப்பில் ராயன் திரைப்படம் வெளியானது. அதில் இடம்பெற்ற உசுரே நீதானே என்ற வரிகளை ரஹ்மான் பாடும்போது விசில்கள் அவ்வளவு பறந்தன.
இளையராஜாவிடம் உதவியாளராக இருந்து பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர். ரஹ்மான். தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைவரது வரவேற்பையும் பெற்று தேசிய விருதையும் பெற்றார். அதன் பிறகு ரஹ்மான் போட்ட மெட்டெல்லாம் ஹிட்டாக பாலிவுட்டுக்கு சென்று அங்கும் தனது கொடியை பறக்கவைத்தார். இதனால் இந்தியா முழுவதும் அறியப்படும் இசையமைப்பாளராக மாறினார்.

இரண்டு ஆஸ்கர்களை அள்ளிவந்த தமிழன்: பாலிவுட்டில் இசையமைத்துக்கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இந்தியாவில் எப்படி அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றாரோ அதேபோல் ஹாலிவுட்டிலும் தான் அறிமுகமான முதல் படத்திலேயே கோல்டன் க்ளோப் விருதுகளையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று அசத்தினார்.
மாமன்னன் ரஹ்மான்: பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் மீது ஒரு அடையாளம் இருக்கிறது. ஷங்கர், மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களுக்குத்தான் இசையமைப்பார் என்பதுதான் அது. ஆனால் மாமன்னன் படத்துக்கு இசையமைத்ததன் மூலம் தனக்குள் அப்படி எந்த பாகுபாடும் இல்லை என்பதை உணர்த்தியிருந்தார். அந்தப் படத்துக்கு சிறப்பான இசையை கொடுத்திருந்தார். அவரது இசையமைப்பில் கடைசியாக அயலான், ராயன், ஆடுஜீவிதம் உள்ளிட்ட படங்கள் வந்தன.. அடுத்ததாக தக் லைஃப் படம் வரப்போகிறது.
டைவர்ஸ்: சூழல் இப்படி இருக்க ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார், அதில், "திருமணமாகி பல வருடங்கள் கழித்து நான் ரஹ்மானை பிரிந்து செல்வது கடினமான முடிவுதான். இத்தனை வருடங்கள் வாழ்க்கையை நகர்த்திய பிறகு சமீபகாலமாக எங்களுக்குள் வலியும் கவலையும் அதிகமாகின. பதற்றங்கள் உருவாகி ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியிருக்கின்றன. அந்த இடைவெளியை நிரப்ப எங்களால் நிரப்ப முடியவில்லை. மிக கடுமையான மன வலியில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ரஹ்மானின் பதில்: இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "எங்களது திருமண வாழ்க்கையில் முப்பது வருடங்களை நிறைவு செய்வோம் என்று நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால் எதிர்பாராத ஒரு முடிவு வந்துவிட்டது. உடைந்த இதயங்களின் கனத்தை கண்டால் கடவுளின் சிம்மாசனமும் நடுங்கிவிடும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லையென்றாலும் நாங்கள் அர்த்தத்தை தேடுகிறோம். இந்த அத்தியாயத்தை கடந்து செல்ல எங்கள் தனியுரிமைக்கு மரியாதை கொடுக்கும் நண்பர்களின் அன்புக்கு நன்றி" என்று குறிப்பிட்டிருக்கிறார்


Click it and Unblock the Notifications











