பிளாக் டைகர் என்ற ரகசிய உளவாளிதான் சர்தார் திரைப்படத்திற்கு அடித்தளம்... பி.எஸ்.மித்ரன் நெகிழ்ச்சி
சென்னை: தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் சர்தார் படம் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இரும்புத்திரை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் முக்கியமான விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்
இந்நிலையில் எங்கிருந்து சர்தார் திரைப்படத்திற்கான உந்துதல் தனக்கு கிடைத்ததாக மித்ரன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரம்
பொதுவாக மித்ரன் கதை எழுத ஆரம்பிக்கும் பொழுது வில்லன் கதாபாத்திரத்தை வைத்துதான் எழுதுவாராம். அவனுக்கு வலுவான விஷயங்களை எழுதிவிட்டு அதை எப்படி கதாநாயகன் முறியடிக்கிறான் என்று பின்னர்தான் கதாநாயகனுக்கு எழுதுவாராம். அந்த வகையில் கடவுள் கொடுக்கும் இயற்கையான தண்ணீரை மக்கள் வீணடிப்பார்கள். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரை வீணடிக்க மாட்டார்கள், ஏனென்றால் காசு கொடுத்து என் தண்ணீரை வாங்குவார்கள். நான் தண்ணீரை பாதுகாக்க வந்தவன் என்று வில்லன் தனக்கான ஞாயத்தை கூறுவான். இப்படித்தான் சர்தார் வில்லன் கதாபாத்திரம் உருவானது.

இரட்டை வேடங்கள்
கார்த்தியின் கதாபாத்திரங்களை பொறுத்தவரை சர்தார் கதாபாத்திரம் பற்றி எனக்கும் கார்த்திக்கும் தெளிவான சிந்தனை இருந்தது. ஆனால் விஜய் கதாபாத்திரத்திற்குத்தான் சற்று மெனக்கிட வேண்டி இருந்தது. கொஞ்சம் தவறினால் கூட அந்தக் கதாபாத்திரத்தை கிரிஞ்சு என்று விமர்சிப்பார்களோ என்று நான் பயந்தேன். ஆனால் எமோஷனல் காட்சிகளை கார்த்தி பிரமாதமாக கையாண்டு இருக்கிறார் என்று மித்ரன் கூறியிருக்கிறார்.

பேராபத்து
இந்தப் படத்திற்காக தான் சேகரித்த ஆய்வுகளை விட குறைவாகத்தான் படத்தில் கூறியிருப்பதாகவும் நிஜத்தில் இன்னும் நம்மை பயமுறுத்தும் பல விஷயங்கள் இருக்கிறது என்றும் மூன்றாம் உலகப் போர் வந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்றும் மித்ரன் கூறியிருக்கிறார். பெட்ரோல் இல்லாமல் மக்களால் உயிர் வாழ முடியும் அதையே காசு கொடுத்துதான் வாங்குகிறோம். அப்படி இருக்கும் பொழுது தண்ணீர் இல்லாமல் மனிதன் வாழ முடியாது அதனை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

பிளாக் டைகர்
சர்தார் திரைப்படத்தின் கதை எழுத முக்கிய காரணமாக இருந்தது பிளாக் டைகர் என்ற ரகசிய உளவாளியின் கதையாம். 1980-களில் ரவீந்திர கௌஷிக் என்ற நாடக நடிகனை ராணுவ வீரனாக மாற்றி பாகிஸ்தானுக்கு 23 வயதிலேயே அனுப்பி அங்கு கல்லூரியில் படித்து பின்னர் ராணுவத்தில் சேர்ந்து மேஜர் பதவிவரை வகித்து அங்கிருந்து இந்தியாவிற்கு ரகசிய தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தார். அந்த தகவலை கேள்விப்பட்டுதான் சர்தார் திரைப்படத்தை எழுத ஆரம்பித்தேன் என்று மித்ரன் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











