பிரம்மிக்க வைக்கும் அன்னை இல்லம்.. சிவாஜி சாதாரண ஆள் இல்லைங்க... விஐபி வாழ்ந்த கோவில்!
சென்னை: நடிகர் திலகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். அவர் வாழ்ந்த வீட்டிற்கு அன்னை இல்லம் என பெயரிட்டார். இந்நிலையில், சிவாஜி பேரன் துஷ்யந்த் கடனை திருப்பி செலுத்தாததால், நீதிமன்றம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளது. இது சிவாஜி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.9 கோடி கடனுக்காக பல கோடி மதிப்புள்ள அன்னை இல்லத்தை ஜப்தி செய்வதா என்ற கேள்விகள் எழுந்தாலும், அன்னை இல்லத்திற்கு பின்னால் பிரம்மிக்க வைக்கும் வரலாற்று நிகழ்வுகள் நடந்துள்ளன.
அன்னை இல்லம்: எம்ஜிஆருக்கு ராமவர தோட்டம், கருணாநிதிக்கு கோபாலபுரம் இல்லம். ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டன் என்றால் சிவாஜிக்கு அன்னை இல்லம். சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ளது இந்த இல்லம். தந்தை பெயரில் இதனை வாங்கிய சிவாஜி பின்பு அன்னை இல்லம் என பெயரிட்டார். பின்பு அதன் பெயரில் படங்களையும் எடுத்துள்ளார். அவர் பெயர் வைத்த ராசியோ என்னவோ தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட அன்னை இல்லங்கள் உருவாகியுள்ளன. இங்கு சிவாஜி நடித்த பல படங்கள் படமாகி உள்ளன.

சிவாஜி கணேசன் சாலை: இந்த வீட்டை அலங்கரிக்க 2 ஆண்டுகள் தேவைப்பட்டதாம். தேக்கு மரங்களால் ஆன அலங்காரங்கள், பிரமாண்டமான அழகியல் வடிவமைப்புகள் என பார்க்கவே பிரம்மிப்பை ஏற்படுத்தும். நடிகர் சிவாஜி கணேசன் செவாலியே விருது வாங்கியதையடுத்து, சென்னை மாநகராட்சி தெற்கு போக் சாலையை செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று மாற்றியது.
பாவை விளக்கு: சிவாஜி நடித்த பாவை விளக்கு படத்தின் மூலம் முதன் முதலில் அன்னை இல்லத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தின் முதல் காட்சியே அன்னை இல்லத்தில் இருந்து தான் தொடங்கும்.
இதற்கு முன்பு வரை எந்த ஒரு கதாநாயகனின் வீட்டையும் தமிழ் சினிமாவில்படம்பிடித்தது இல்லை என்பது வரலாறு, தமிழ்சினிமாவில் முதல் அன்னை இல்லக் காட்சி என்ற சிறப்பையும் தாங்கி நிற்கிது.

பார் மகளே பார்: அதேபோன்று பார் மகளே பார், பந்தபாசம் போன்ற படங்களின் பல காட்சிகள் அன்னை இல்லத்தில் தான் நடைபெற்றது. குங்குமம் படத்தின் ஒரு காட்சியில் எஸ்எஸ்ஆர். அன்னை இல்லத்தின் வாசலில் இருந்து பேசிக் கொண்டு இருப்பார். அதே போன்று பாசமலர் படத்திலும் அன்னை இல்லத்தை யாராலும் மறக்க முடியாது. சகோதரியான சாவித்திரிக்கு சொத்தையும், வீட்டையும் கொடுத்து விட்டு நீண்ட நாட்கள் கழித்து தங்கையை பார்க்க வீட்டிற்கு வருவார், அப்போது ஏழ்மை நிலையில் வருபவரை வீட்டுக்குள் வரவிடாமல் செய்வார்கள். கந்தல் உடையில் நொந்த நிலையில் அன்னை இல்லத்தை நோக்கி சிவாஜி பார்ப்பார்.
தங்கப்பதக்கம்: தமிழ் சினிமாவில் தங்கப்பதக்கம் சிவாஜியை யாராலும் மறக்க முடியாது. இப்படத்தில் குழந்தையைக் கடத்தியவன் அந்த வீட்டின் முதலாளியிடம் போன் செய்து மிரட்டுவார். அந்த முதலாளியின் வீடுதான் அன்னை இல்லம். அண்ணன் ஒரு கோவில் படத்தில் பல காட்சிகள் அன்னை இல்லத்தில்தான் படமாக்கப்பட்டன. திரிசூலம் படத்தில் சிவாஜி ஆரம்பமாகும் முதல் மற்றும் இறுதிக் காட்சியும் அன்னை இல்லம்தான். அதேபோன்று ரத்த பாசம் படத்தில் சிவாஜி அறிமுகம் ஆகும் காட்சியும் அன்னை இல்லத்தில் தான். போலீஸ் உடையில் கம்பீரமாக நடந்து வருவார்.

தெறி: சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கமல், பிரபு, அமலா, குஷ்பு என பலர் நடிப்பில் உருவான வெற்றி விழா படமும் அன்னை இல்லத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் வில்லன் சலீம் அறிமுகம் ஆகும் வீடு அன்னை இல்லம் தான். பிரபுவின் 100ஆவது படமான ராஜகுமாரன் படத்தில் சிவாஜி பிரபுவிற்கு ஆசி வழங்குவார். அதுவும் அன்னை இல்லம் தான். விஜய் நடித்த தெறி படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரன் வரும் காட்சிகள் அனைத்தும் அன்னை இல்லத்தில் தான் நடைபெற்றன. இதுபோன்று அன்னை இல்லத்திற்கு பல கதைகள் இருக்கின்றன. சிவாஜி உருவாக்கிய மாளிகை ஜப்தி செய்தி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சி செய்தி தான்.


Click it and Unblock the Notifications











