யுவர் ஆனர்.. நோ சொன்னா நோதான்.. அதகளம் செய்த கோர்ட் வசனங்கள்!
சென்னை: சினிமா ஒரு திகட்டாத தேன் கிண்ணம். மனிதனின் சிந்தனை ஆற்றலைத் தூண்டியது சினிமா என்றும் கூறலாம். ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ, அந்த கதையை மெருகேற்ற, கதையின் தரத்தை கூட்ட வசனம் மிகவும் அவசியமானது.
Recommended Video
ஒவ்வொரு காட்சியும் முடிந்து அது பிறவற்றுடன் இணையும் போது அந்த காட்சி கூடுதல் அர்த்தம் பெறுவதாக மாறுகிறது. விசில் அடித்து, கைதட்டி, ஆட்டம் போட்டு ஆரவாரம் செய்து நாம் பார்க்கும் சினிமா சில நேரம் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.
அப்படி, பெண்களை போற்றிக்கொண்டாடி, பெண்ணுக்கு கிரீடமிட்டு நீதிமன்றத்தில் தெறிக்கவிட்ட இரு திரைப்படங்களின் வசனங்களை இப்போது பார்ப்போம்.

கொண்டாடப்பட்ட வசனம்
கதைக்காகவும், பாடலுக்காகவும் சில படங்கள் வெற்றி பெறும். ஆனால், வசனத்திற்காக வெற்றி பெற்ற படம் விதி. கோர்ட் வசனங்கள் கொண்ட படங்கள் பல வந்திருந்தாலும், விதி படத்தின் மிகப்பெரிய பலமாக நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகளும் வசனங்களும் பெரிய அளவில் பேசப்பட்டு கொண்டாடப்பட்டன. மான அவமானத்திற்கு பயந்து எல்லாம் தனது விதி என்று விதியின் மீது பழி போட்டு தப்பித்துக்கொள்ளாமல் துணிந்து போராடிய பெண்ணின் கதை.

வரம்பு மீறிய வசனம்
காதலித்து நம்பிக்கை கொடுத்து ஏமாற்றியவனை கோர்ட்டுக்கு இழுத்து, தன் மீதான களங்கத்தை துடைக்க நடத்திய ஒரு பெண்ணின் போராட்டமே விதி. நீதி கேட்டு நீதிமன்றம் சென்ற பெண்ணிடம் டைகர் தயாநிதி (ஜெயசங்கர்) கேட்கும், வரம்பு மீறிய வசனம் இந்த படத்தின் ஹைலைட். மானம், அவமானம், கற்பு,பெண்மை இவை அனைத்துக்குள்ளும் பெண்களை கட்டிப்போட்டு இஷ்டத்துக்கு ஆட்டம் போடும் ஆண்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது இந்த படம்.

பெண் புலி சுஜாதா
சகுந்தலா கதாபாத்திரத்தில் வரும் சுஜாதா பேசிய க்ளைமாக்ஸ் வசனம், பெண் மூலமாக பிறந்த ஒரு ஆண், அந்த பெண் இனத்தையே அழிக்கலாம் என்ற வசனம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. பெண்களை காதல் வலையில் விழவைத்து ஏமாற்றி கழட்டிவிடும் சூரர்களுக்கு முதுகில் விழந்த சவுக்கடியாக அமைந்தது விதி. சுஜாதா வசனம் பேசிய அத்தனை இடமும் ரசிகர்களை கண்ணில் நீர் வர வைத்தது என்றால் மிகையில்லை

வரவேற்பை பெற்றது
அடுத்த படம் நேர்கொண்ட பார்வை. ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங் என மூன்று பெண்களை மையமாக வைத்து கதை நகருகிறது. எதிர்பாராத பிரச்சினையில் சிக்கிய பெண்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக தல அஜித் ஆஜராகி வசனங்களில் அனல் தெறிக்கவிட்டு இருப்பார். ஆர் யூ வெர்ஜீன் என்ற டயலாக்காகட்டும், ஒரு பெண் நோ என்று சொன்னால் அதன் அர்த்தம் நோ என்று பேசிய வசனமாகட்டும், அவை பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியது.

பெரிதும் பேசப்பட்டது
சுந்திரமாக இருக்குற பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்து வாதாடும் வக்கீலாகவும், மார்டனா இருக்குற ஒரு பெண் பற்றி ஆணின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அனல் தெறிக்கும் வசனங்கள் மூலம் இப்படத்தில் சித்தரித்திருப்பார்கள். இந்த படத்தில் இடம் பெற்று இருக்கும்."No means No "என்று அஜித் சொன்ன வார்த்தை பெண்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. மார்டன் பெண்ணாக இருந்தாலும், என் உடை, என் நடை, என் பேச்சில் காமமும், சற்று ஆபாசம் இருந்தாலும் ‘நோ ‘ என்றால் அது ‘நோ‘ என்ற உள்ளார்த்த அர்த்தம் பெண்களை மட்டும் அல்ல பல ஆண்களின் மனத்தை கவர்ந்த வசனமாகவே கைத்தட்டலையும் பெற்றது.

மாற்றம் ஏற்படுமா
இது போன்ற வசனங்களால் ஒரு சில மாற்றங்களையாவது இந்த சமுதாயத்தில் ஏற்படுத்த முடியும் என்றால் அது நிச்சயம் பெரிய வெற்றிதான். பொறுத்துக் கொள்ளவும் சகித்துக்கொள்ளவும் நாம என்ன பொம்பளையா என கேட்கும் ஆண்களுக்கும், ஆண் நெடில், பெண் குறில் பெண் எனக்கு கீழானவள் என மார்த்தட்டிக் கொள்ளும் ஒரு சில ஆண்களுக்கும் பாடம் புகட்டுவது போல் ஒரு சில படங்களாவது வர வேண்டும். குறைந்தபட்சம் இதுபோன்ற குத்தீட்டி வசனமாவது படங்களில் இடம் பெற வேண்டும்.


Click it and Unblock the Notifications











