For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எழுத்துக்கும் திரைப்படத்திற்கும் இடையிலுள்ள நடுக்கோடு!

  By Shankar
  |

  - கவிஞர் மகுடேசுவரன்

  இலக்கியங்களைத் திரைப்படமாக்குவதில் நம்மவர்கள் முனைப்பு காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக முன்வைக்கப்படுகிறது. திரைப்படம் தோன்றிய காலந்தொட்டு அது இலக்கியக் கதைமாந்தர்களைத்தான் திரையில் காட்டி மக்கள் செல்வாக்கைப் பெற்றது. பெருங்கதையாடல்கள் நிகழ்ந்த தொல்நிலமான இங்கே இதுவரை கூறப்பட்ட பழங்கதைகளுக்கு அப்பால் ஒரு புதிய கதைக்கு நம்மவர்களை அவ்வளவு எளிதில் பழக்கிவிட முடியாது. அதனால்தான் 'மன்னன் மக்கள் கதைகள்' கறுப்பு வெள்ளைக் காலத்தில் மிகுதியாக எடுக்கப்பட்டன. பிறகு சமூகக் கதைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தலையெடுக்கத் தொடங்கின.

  திரைக்கலைக்கு நூற்றாண்டு வரலாறு என்றால் எழுத்துப் படிகளுக்கு ஆயிரமாண்டு வரலாறு. அதனால் இங்கே எழுத்தாகவும் சொல்கதையாகவும் பாடலாகவும் பயின்று வந்தவையே திரைப்படத்தில் முதலில் ஏறின. அந்தத் தொடக்க நிலைப்போக்குகளுக்குப் பிறகு பழங்கதைகளும் திரைப்படமாகவில்லை. புதிய எழுத்துருவாக்கங்களும் திரைப்படங்களில் மிகுதியாய் இடம்பெறவில்லை. திரைக்கலைக்கும் தொன்மைக்கும் தொடர்பில்லை என்பதைப்போன்ற இறுக்கம் தென்னிந்தியத் திரைப்படங்களில் நிலவுவது கண்கூடு. திரைப்படங்களில் புதின இலக்கியங்களில் கூறப்படும் விரிகதைகளும் கண்டுகொள்ளப்படுவதில்லை. இது என்ன இடைவெளி ?

  A thin line between movies and novels in Tamil Cinema.

  பாலுமகேந்திரா அந்த இடைவெளியை ஒரே வாக்கியத்தில் எடுத்தியம்பினார். "தாஜ்மகாலைப் பற்றி எழுத்தில் ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். ஆனால், காட்சியில் அதை ஒரேயொரு சுடுவில் விளக்கிவிட முடியும். எழுத்தில் ஆயிரம் பக்கங்களில் விளக்கியும் தோற்றுவிக்கப்பட முடியாத உணர்ச்சிகளை அந்த ஒரு சுடுவினால் ஏற்படுத்த முடியும்." இந்த வேறுபாடுதான் இலக்கியத்தையும் திரைப்படத்தையும் நடுக்கோடாகப் பிரிக்கிறது.

  இலக்கியம் எதை வேண்டுமானாலும் விரித்துச் சொன்னபடி செல்லும். எழுத்தாளரின் போக்கில் உள்ளத்து உணர்ச்சிகளைப் பத்துப் பக்கங்களுக்கு நீட்டி முழக்கலாம். ஆனால், அதை ஒரேயொரு சுடுவாகத்தான் காட்சி வடிவமாக்க முடியும். உள்ளத்து அலைகளை எழுத்து கணக்கில் கொள்ளும். திரைப்படத்தில் உணர்ச்சிகளின் புறநிலைகளைத்தான் காட்சியாக்க முடியும். இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு காப்பியச் சுவையைக் கண்டுபிடிக்கலாம். அதைக் கண்டுபிடிக்கத் தெரிந்த கூருணர்ச்சியாளர்களால் ஓர் இலக்கியம் திரைப்படமாகி இருக்கிறது. ஆனால், எல்லா இலக்கிய வடிவங்களிலும் அது இடம்பெற்றிருக்கும் என்று கூற இயலாது.

  "அவன் வந்தான். பார்த்தான். இன்னின்ன நிகழ்வுகளால் அந்தப் பழக்கம் காதலாயிற்று. இன்னின்ன நிகழ்வுகளால் அந்தக் காதலுக்கு ஊறு விளைந்தது. அதை எதிர்கொண்ட காட்சிகள்... முடிவு," என்பதுதான் திரைக்கதைக்குக் கச்சாப் பொருள். அவர்கள் சந்தித்துக்கொண்ட காட்சியையே ஐம்பது பக்கங்களுக்கு விரித்துச் சொல்லுவது இலக்கியத்தின் கச்சாப்பொருள். இவ்விரண்டுக்கும் நடுவில் செல்லும் இழையைத் தனியே பிரித்தெடுக்கத் தெரிந்தால்தான் ஓர் இலக்கியம் திரைப்படமாகத் தகுதி பெறும். இவ்விடத்தில் ஓர் எழுத்தாளர் எவ்வளவுக்குக் காட்சி ஆக்கங்களை ஆக்கவல்லார் என்பதும் கணக்கில் கொள்ளப்படும். அதேபோல இலக்கியத்தை நாடும் ஓர் இயக்குநர் அவ்வெழுத்தை எவ்வளவுக்கு நுண்மையாய்ப் படித்து உணரவல்லார் என்பதும் கேள்விக்குறி. என் கணிப்பின்படி திரைப்படமாகவே சிந்தித்துப் பழகியவர்களுக்கு எழுத்தின் நுண்மைகளை உணரும் திறன் குன்றிவிடுகிறது என்றே கூறுவேன். நம்மவர்கள் இவ்வளவு தொலைவுக்கெல்லாம் வினைக்கெடுவதில்லை. இலக்கியத்தைப் படித்து இரண்டு காட்சிகளை உருவத் தெரிந்தால் போதும் என்ற சுருக்குவழியை அறிந்திருக்கிறார்கள்.

  A thin line between movies and novels in Tamil Cinema.

  நாம் காணும் மேற்குலகத் திரைப்படங்கள் பலப்பல புதினங்களை அடியொற்றியே எடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கே திரைக்கதைக்கு நிகரான நிலமளக்கும் கதைகளாக ஒரு புதினம் எழுதப்படுகிறது. திரைப்பொருளாகும் எண்ணற்ற கூறுகள் எழுத்துப் படிகளுக்குள் அடக்கம். அது மட்டுமின்றி எழுதப்பட்ட கதையைத் திரையில் காணும் வேட்கையுடைரோராய் அங்குள்ள பார்வையாளர்கள் இருக்கின்றார்கள். ஆரி பாட்டர் நூலாகவும் விற்கிறது. படமாகவும் விற்கிறது. ஒன்றோடொன்று தொடர்புடைய வணிகமாக இருக்கிறது. ஆனால், நம்மவர்கள் திரைக்கதையைத் தனியே சிந்தித்து ஒரு படக்கதையாக மாற்றுகிறார்கள். எழுத்தாக எழுதப்பட்ட கதையிலுள்ள காட்சிக்கூறுகள் கூறுகள் அவர்களுக்குப் போதவில்லை என நினைக்கிறேன்.

  A thin line between movies and novels in Tamil Cinema.

  திருவிளையாடற் புராணத்தின் ஒவ்வொரு திருவிளையாடலிலும் ஒரு கதை இருந்தது. அதைத் திரைக்கேற்ப எப்படிக் களிகூறுடைய ஆக்கமாக மாற்றலாம் என்பது ஏபி நாகராஜன் என்னும் திறமையான திரைக்கலைஞர்க்குத் தெரிந்தது. அவர்க்கு வேண்டியதைவிடவும் செம்மையாகச் செய்துதரும் நடிகர்கள் அமைந்தனர். அதனால்தான் அந்தத் திரைப்படம் நான்கைந்து உட்கூறுகளோடு இருப்பினும் விரும்பிப் பார்க்கப்பட்டது. அத்தகைய கதைத்தன்மை தற்காலத்தில் எழுதப்படும் புதினங்களில் இல்லையோ என்று ஐயப்படுகிறேன். ஒரு கதை பல்வேறு நிலங்களுக்குள் அலைவது மிகவும் இன்றியமையாதது. உலகெங்கும் மிகுதியாய் விற்கும் எழுத்துகளை எழுதுவோர் கதைகளில் பனிமலைகளும் பாலைவனங்களும் தீவுகளும் இடம்பெறுகின்றன. நாம் ஓர் ஊர்க்குள்ளேயே அல்லது ஒரு வீட்டுக்குள்ளேயே நடக்கும் கதைகளையே எழுதிக்கொண்டிருக்கிறோம். இல்லாவிட்டால் நம் கதை நாயகன் பேருந்திலேறி பக்கத்திலுள்ள ஊர்க்குச் செல்வதுவரை நகர்த்துவோம்.

  A thin line between movies and novels in Tamil Cinema.

  முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகளில் கதைத்தன்மை செறிந்திருந்தது. அக்னி பிரவேசம் என்ற சிறுகதைதான் சில நேரங்களில் சில மனிதர்கள் ஆயிற்று. கல்வெட்டு என்ற சிறுகதைதான் அழகி என்ற திரைப்படமாயிற்று. சாசனம் என்ற சிறுகதைதான் மகேந்திரனுக்குத் திரைக்கதையாயிற்று. சித்தி என்ற குறுங்கதையின் சாரம் உதிரிப் பூக்கள் ஆயிற்று. அசோகமித்திரனின் புலிக்கலைஞனில் இருந்த அடர்கதைத்தன்மை இன்று எழுதப்படும் கதைகளில் காணாமல் போனதேன்? மனக்குழப்பங்களை நிரல்பட எழுதிவிட்டால் அது கதையாகிவிடுமா? குழப்பமான காட்சிச் சிந்தனைகளைத் தொகுத்து எழுதிவிட்டால் கதை எங்கே நிகழும்? ஒருவேளை அன்றிருந்த வாழ்வின் பன்முகத்தன்மை குலைந்துபோய்விட்டதோ? ஒரு திரைப்படத்தில் எல்லாம் இருக்கிறது, கதையைத்தான் காணவில்லை என்று நகைச்சுவையாகச் சொல்கிறோம். இங்கே எழுதப்படும் சிறுகதை, புதினங்களிலும் அதே கதையைத்தான் காணவில்லை.

  அன்றைய மக்களுக்கு ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு வாழ்வு அமைந்தது. இன்றுள்ள நம் அனைவர்க்கும் ஒரே வகையான வாழ்க்கை முறைதான். அதுகூட நம் அன்றாட வாழ்வில் இடம்பெற வேண்டிய கதைத் தன்மைகளை அழித்துவிட்டதா? அப்படியும் இருக்கலாம். எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே. அதனால்தான் இன்றைய திரைப்படங்கள் வரலாற்றுக் கூறுகளை நோக்கி மெல்ல நகர்கின்றன. அல்லது வெற்றி பெற்ற பழைய திரைப்படங்களையே மாற்றி எடுக்கிறார்கள். எழுத்து ஒற்றைத்தன்மையான வாழ்க்கைக்குள் சிக்கிக்கொண்டதைப்போல, திரைப்படங்களும் கூறியது கூறலுக்குள் சிக்கிக்கொண்டன.

  English summary
  Poet Magudeswaran's analysis on the thin line between movies and novels in Tamil Cinema.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X