For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆச்சர்ய ஆச்சி!

  By Shankar
  |

  -எஸ் ஷங்கர்

  பத்து நாட்கள் முன்பிருக்கும்... தமிழ் சினிமா பத்திரிகையாளர் சங்க விழாவுக்கு வந்திருந்தார் ஆச்சி மனோரமா. 65 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி பக்கம் பக்கமாக எழுதிய வசனத்தை அட்சரம் பிசகாமல், கண்ணில் நீர் தளும்ப அதே பாவத்துடன் சொல்லி முடித்த காணொளியைப் பார்த்தபோது, 'ஆஹா.. வயதை வென்ற இந்த பெரும் கலைஞருடன் ஒரு படம் எடுத்துக் கொள்ளவில்லையே என்று தோன்றியது.

  இப்படிப்பட்ட கலைஞர்களுடன் படமெடுத்துக் கொள்வது சிறுபிள்ளைத்தனமல்ல.. அது காலப்பதிவு. பின்னர் ஏங்கினாலும் அமையாத வரம். இந்த வாரம் வரச் சொல்லியிருந்தார் ஆச்சியின் மகன். இனி போய் என்ன பயன்!

  A Tribute to Aachi!

  சிலரது நடிப்பு, ஆஹா என்னமா நடிக்கிறார் பார் என்று வியக்குமளவுக்கு இருக்கும். சிலரது நடிப்பை அந்த ஆச்சர்யத்தைத் தாண்டி ரசிக்கலாம்.. சிரித்து மகிழலாம்... கண்ணீர் தளும்ப நெகிழலாம்.

  ஆச்சி இந்த இரண்டாவது ரகம். 'எப்படி நடிக்கிறேன் பார்' என்று சவால் விடும் ரகமல்ல அவர் நடிப்பு. அதையும் தாண்டி ரசிக்க வைப்பது.

  எம்ஜிஆரின் அன்பே வா படம். சிம்லா மாளிகைக்கு வந்திருப்பவர் முதலாளிதான் என்பது மனோரமாவுக்குத் தெரியும்... ஆனால் அவர் காதலன் நாகேஷ், அது தெரியாமல் அவரிடமே எல்லாவற்றுக்கும் பேரம் பேசும் காட்சிகளில் மனோரமா காட்டும் தவிப்பு, கோபம், பயம் எல்லாம் கலந்த நடிப்பு... அந்தப் படத்தின் நாயகியான சரோஜாதேவி கூட காட்டாத ஒன்று!

  குரு சிஷ்யன் என்றொரு படம். மனோரமாவுக்கு சின்ன வேடம்தான். போலி சிபிஐ ஆபீசர்களாக வருபவர்களிடம் மனோரமா காட்டும் பயம், நகை, பணம் போகிறதே என்ற அங்கலாய்ப்பு, இன்னொரு பக்கம் ஜலஜாவுடன் ஜல்சாவாக இருக்கும் கணவன் மீது கோபம், பறிபோகிற பணத்தைக் காக்க கடைசி நேர டீல் பேசும் தவிப்பு.... இத்தனையையும் 5 நிமிடக் காட்சியில் காட்டி முடித்திருப்பார் மனோரமா. அங்கே ரஜினி, பிரபு உள்ளிட்ட அனைத்து நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளி கொடிகட்டிப் பறப்பார் ஆச்சி!

  சின்னக் கவுண்டரில் ஆத்தா மனோரமாவுக்கும் மகன் விஜயகாந்துக்கும் கூட இல்லாத பந்தம், 'ஆவுடை' சுகன்யாவுக்கும் மனோரமாவுக்கும் இடையே. இருவரும் மனதுக்குள் செல்லமாய் 'கறுவும்' அந்தக் காட்சி, எந்தப் படத்திலும் காணக் கிடைக்காதது. எந்த நடிகராலும் அத்தனை இயல்பாக செய்ய முடியாதது!

  நடிகன் படத்தில் அப்படியொரு பாத்திரத்தை மனோரமா காலத்தைச் சேர்ந்த வேறு எந்த நடிகையாலும் முடிந்திருக்குமா... முடிந்தாலும் பொருந்தியிருக்குமா என்பது சந்தேகம்தான்.

  பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்திருப்பார். படம் முழுக்க கவுண்டரும் மனோரமாவும் நடிப்பில் தங்களையும் அறியாமல் அத்தனை இயல்பாக நடித்திருப்பார்கள்.

  இதை தன்னால் நடிக்க முடியாது என எந்த வேடத்தையும் தள்ளியவரில்லை மனோரமா. கடினமான சூழல், வசனங்கள் கொடுத்தால், 'இருங்க.. இது சரியா பாருங்க' என்று அடுத்த நிமிடம் அந்த பாத்திரத்துக்குள் போக முயற்சிப்பார். அதுதான் அவரை நகைச்சுவை - குணச்சித்திர நடிகைகளின் அரசியாக உயர்த்தியது.

  அரசியல், சினிமா, பொதுவெளி என எங்கும் எதிரிகளற்ற நிலை வேண்டும் எனப் புரிந்து, அதற்கேற்ப நடந்து கொண்டவர் மனோரமா. "இருக்கிற கொஞ்ச காலத்துல.. யாருக்கும் கெட்டவங்களா, யார் மனசும் நோகடிச்சோம்ங்கற பேரோட இருக்கக் கூடாதுய்யா..." என்றார் ஒரு முறை.

  A Tribute to Aachi!

  ஆச்சியிடம் பெரிதும் வியந்தது.. அவரது தமிழறிவு.. தமிழுணர்வு... தமிழைப் பேசும் முறை. பலருக்கும் தெரியாதது, மனோரமாவின் தமிழறிவு. நகைச்சுவை நடிகைதானே என்று அலட்சியமாக நினைப்பார்கள். ஆனால் ஒரு தமிழறிஞருக்குரிய ஆர்வமும், புலமையும் தமிழில் அவருக்குண்டு. சாதாரண பேட்டியின்போதே, சங்கத் தமிழ் உதாரணங்கள் சொல்லி பிரமிக்க வைத்தவர் அவர்.

  தமிழை மிகச் சரியாகப் பேசும் கலைஞர்களுள் முதன்மையானவர் மனோரமா.

  சென்னைத் தமிழா, கோவை வழக்கா, மதுரை பாணியா, நெல்லைச் சொல்லாடலா.. தஞ்சைத் தமிழா... என்ன வட்டார வழக்கையும் அட்சர சுத்தமாகப் பேசத் தெரிந்த ஒரே நடிகை மனோரமாதான்.

  ஆச்சியை இருமுறை சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறேன். அத்தனை பெரிய நடிகை, துளி பந்தா இல்லாமல், 'வணக்கம், பேசலாமாய்யா...' என்று ஆரம்பிப்பார். ரஜினிக்கும் தனக்குமான அரசியல்மாச்சர்யத்தை, 'உண்மைதான்... நான்தான் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட்டேன். தம்பி (ரஜினி) அதை பெருந்தன்மையா எடுத்துக்கிச்சு.. பெரிய மனசு," என்று ஒப்புக் கொண்டார். வெற்று வீம்பு பார்க்காத அவரது பண்புக்கு உதாரணம் இது.

  தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபிறகு, அவர் அடிக்கடி உச்சரித்தது ஜெயலலிதா, ரஜினி, கமல் மூவரின் பெயர்களைத்தான்!

  எந்த நிகழ்ச்சிக்கும் ஆச்சி தாமதமாக வந்ததாக நினைவில்லை, என்னதான் உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும்.

  "உடம்பு சரியில்லதான். இப்ப கொஞ்சம் தேவல. வந்துடறேன்" - சுகவீனமாக இருக்கும் தருணங்களில் அவர் சொல்லும் வார்த்தைகள் இவை.

  A Tribute to Aachi!

  அவர் கடைசியாகப் பங்கேற்றது சினிமா பத்திரிகையாளர் சங்க நிகழ்ச்சியில்தான். அதில் கருணாநிதியின் வசனங்கள் மற்றும் இன்னொரு படத்தின் வசனங்களை பேசி நடித்துக் காட்டிய அவர், இறுதியில் ஒரு வார்த்தை சொன்னார்... "இந்த நிமிஷம்... இந்த மேடையிலேயே நான் செத்துப்போனால் கூட கவலையில்லை... அத்தனை திருப்தியோடு இதைச் சொல்கிறேன்," என்றார்.

  மனதாலும், உடலாலும் துன்புற்றவர் அவர். இந்த மாதிரி நல்ல நிகழ்ச்சிகளில் நல்லவற்றைப் பேசிய திருப்தியோடு சொன்ன அந்த வார்த்தையை, இயற்கை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு அடுத்த ஒரு வாரத்திலேயே அவர் உயிரைப் பறித்துக் கொண்டது...

  A Tribute to Aachi!

  ஆச்சி இன்னும் சில ஆண்டுகள் நலமோடு வாழ்ந்திருக்கலாம். நல்ல குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கலாம்... காலம் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டது. இது நமது பார்வையில்தான். ஆச்சியைப் பொருத்தவரை அவர் விட்டுவிடுதலையாகிச் சென்றிருக்கிறார். ஆத்மா சாந்தியட்டும்!

  English summary
  Here is a tribute to late legend Aachi Manorama, who passed away yesterday due to cardiac arrest.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X