பத்து தல ஃபீவர்.. நீங்கள் இல்லாம நான் இல்லை.. கேரள மக்களுக்கு சிம்பு வைத்த கோரிக்கை
சென்னை: பத்து தல படம் கேரளாவில் ரிலீஸாவதை முன்னிட்டு நடிகர் சிலம்பரசன் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பத்து தல படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது.

கம்பேக்கில் மாஸ் காட்டும் எஸ்டிஆர்
வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படம் மூலம் கோலிவுட்டில் தரமான கம்பேக் கொடுத்த சிலம்பரசன் இரண்டாவது இன்னிங்ஸில் பயங்கர் சுறுசுறுப்புடன் காணப்படுகிறார். மாநாடு படத்தைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படமும் ஹிட்டாக அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிவருகிறார் சிம்பு. அதன்படி சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் தற்போது நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு கமல் ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் சிம்பு.

ரசிகர்களை உற்சாகப்படுத்திய பத்து தல ட்ரெய்லர்
சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சென்றாயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கௌதம் கார்த்திக்கை வைத்துதான் படத்தின் கதை நகரும் என்றாலும் சிம்புவின் கதாபாத்திரம்தான் பேசப்படும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏஜிஆர் ராவணன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் சிம்புவை திரையில் பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

கேரளாவில் ரிலீஸாகும் பத்து தல திரைப்படம்
பத்து தல திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் வெளியாகிறது. கேரளாவில் இந்தப் படத்தை க்ரவுன் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதற்கான புக்கிங் தொடங்கி சிறப்பாக நடந்துவருகிறது. தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் கேரளாவிலும் சிம்பு தனது மாஸை நிரூபிப்பார் என அவரது ரசிகர்கள் அதிகம் நம்பியிருக்கின்றனர். ஏற்கனவே அவரது மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு படம் கேரளாவில் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிம்பு வைத்திருக்கும் கோரிக்கை
இந்நிலையில் கேரளாவில் படம் ரிலீஸாவதையொட்டி சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "கேரள மக்களுக்கு வணக்கம். என்னுடைய படம் பத்து தல கேரளாவில் 150க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது. க்ரவுன் பிலிம்ஸ் படத்தை வெளியிடுகிறது. கேரள மக்களை நேரில் பார்ப்பதற்கு நான் ஆசைப்பட்டேன்.

கேரளா எப்போது ஸ்பெஷல்
விண்ணைத்தாண்டி வருவாயா படம் மற்றும் ஆன்மீக ரீதியாக எனக்குள் நடந்த மாற்றம் என கேரளா எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். மாநாடு படத்துக்கும், வெந்து தணிந்தது காடு படத்துக்கும் சிறப்பான ஆதரவை கொடுத்து இருந்தீர்கள். கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படம் உருவாகியிருக்கிறது. மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. என் தம்பி கௌதம் கார்த்திக் நன்றாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்களும் சிறப்பாக வந்திருக்கின்றன. உங்கள் அனைவருக்கும் பத்து தல நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன். குடும்பத்தோடு பார்த்து ரசியுங்கள். நீங்கள் இல்லாமல் நான் இல்லை" என பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











