Aadujeevitham box office: அடேங்கப்பா.. 75 கோடி வசூலை ஈட்டிய ஆடு ஜீவிதம்.. அடுத்த ஸ்டாப் 100 கோடி!
சென்னை: கஷ்டப்பட்டு உழைத்தால் கை மேல் பலன் என்பது ஆடு ஜீவிதம் பட விவகாரத்தில் சரியாகவே மாறியிருக்கிறது. பல ஆண்டுகளாக படத்தை பெரும் பட்ஜெட்டில் உருவாக்கிய நிலையில், தற்போது 5 நாட்களில் 75 கோடி வசூலை ஆடு ஜீவிதம் அதிரடியாக அள்ளியிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல் நாளில் 16 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய ஆடு ஜீவிதம் திரைப்படம் முதல் வார இறுதியான 4 நாட்கள் விடுமுறையை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நிலையில், இப்படியொரு வசூல் வேட்டையை நடத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் மரியான் போலவே இருப்பதால் படம் ஓடாது என எதிர்பார்த்த நிலையில், படத்தின் தரம் மற்றும் பிருத்விராஜின் கடின உழைப்புக் காரணமாக இங்கேயும் பிக்கப் ஆகி ஓடி வருகிறது.
75 கோடி வசூல்: பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் நடிப்பில் கடந்த மார்ச் 28ம் தேதி வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் திங்கட்கிழமையோடு சேர்த்து 5 நாட்களில் 75 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை விட அதிவேகமாக ஆடு ஜீவிதம் படம் 75 கோடி வசூலை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நல்ல படங்களும் வசூலும்: தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் கடந்த ஆண்டு சூப்பரான படங்கள் வரவில்லை என்றாலும் பெரிய நடிகர்கள் படங்கள் வசூலில் அதிகம் கல்லா கட்டின. ஆனால், மலையாளத்தில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த ஆண்டு படங்கள் வெற்றிப் பெற்று வருவது இயக்குநர்களுக்கும் ஹீரோக்களுக்கும் கடுமையாக உழைத்து ரசிகர்களை ஏமாற்றாமல் நல்ல படைப்புகளை கொடுக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வை அதிகரிக்க செய்யும் என தெரிகிறது.

100 கோடி விரைவில்: 5 நாட்களிலேயே 75 கோடி வசூலை ஆடு ஜீவிதம் ஈட்டியுள்ள நிலையில், தொடர்ந்து டிக்கெட் டிமாண்ட் கேரளாவில் நிலவி வருகிறது. தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமே இந்த படத்துக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. மற்ற இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 10 நாட்களில் 100 கோடி வசூலை ஆடு ஜீவிதம் அசால்ட்டாக கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவிக்கும் தமிழ் சினிமா: பிரேமலு, பிரமயுகம், மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் ஆடு ஜீவிதம் என அடுத்தடுத்து 4 படங்கள் 75 கோடி வசூலை கடந்து சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழில் வெளியான படங்கள் இதுவரை வசூல் ரீதியாக ஒரு ஹிட் கூட கடந்த 3 மாதங்களில் பெறவில்லை. இந்த மாதமும் தமிழில் பெரிய படங்கள் வருவது போல தெரியாத நிலையில், கோலிவுட் எப்போது கம்பேக் கொடுக்கும் என தமிழ் திரையுலகமே தவித்துக் கொண்டிருக்கிறது. கங்குவா, இந்தியன் 2, அமரன், வேட்டையன், கோட் உள்ளிட்ட படங்கள் வெளியானால் தான் இந்த நிலைமை மாறும் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











