Najeeb: பாம்புகள்கூட என்னை கடிக்கலை.. எனக்கு இது மறுஜென்மம்.. ஆடு ஜீவிதம் ரியல் ஹீரோ நெகிழ்ச்சி!
சென்னை: நடிகர் பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து பிளெஸ்ஸி இயக்கத்தில் கடந்த மாதத்தில் வெளியான ஆடு ஜீவிதம் படம் சர்வதேச அளவில் அனைத்து தரப்பினரையும் உருக செய்துள்ளது. இப்படி எல்லாம் உண்மை சம்பவங்கள் நடக்கிறதா என்ற விஷயங்களை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த படத்தின் ரியல் நாயகன் நஜீப் தற்போது அனைவரிடையேயும் கவனம் பெற்றுள்ளார்.
3 ஆண்டுகள் யாரும் பார்க்க முடியாத பாலைவனத்தில் ஆடுகள் மட்டுமே துணை என்று வாழ்ந்துவந்த நஜீப்பின் துயரம்மிக்க வாழ்க்கை தற்போது அனைவரின் கவனத்திற்கும் உள்ளாகியுள்ளது. தன்னுடைய மனைவியிடம்கூட தான் பட்ட துன்பங்களை அவர் கூறாத நிலையில் மூன்று ஆண்டுகள் அவர் பாலைவனத்தில் ஆடுகளுடன் ஆடாக இருந்த அந்த விஷயங்கள் தற்போது அனைவராலும் கவலையுடன் பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மூலம், தன்னுடைய நடிப்பின் மூலம் பிரித்விராஜ் சர்வதேச அளவில் நஜீப் உள்ளிட்டவர்களின் வாழ்க்கையை கவனத்திற்குள்ளாக்கியுள்ளார்.

நடிகர் பிரித்விராஜ்: நடிகர் பிரித்விராஜின் சிறப்பான நடிப்பில் இயக்குனர் பிளெஸ்ஸியின் கூட்டணியில் உருவாகி கடந்த மாதத்தில் சர்வதேச அளவில் ரிலீசான ஆடு ஜீவிதம் படம் ஏராளமான ரசிகர்களை கலங்கடித்துள்ளது. நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பென் யாமின் என்ற எழுத்தாளர் எழுதியிருந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை மையமாகக் கொண்டு இந்த படம் அதே பெயரில் வெளியாகி உள்ளது. அரபு நாடுகளில் பாலைவனத்தில் விடப்பட்டு ஆடுகளுடன் ஆடாக தனித்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்ட நஜீத் என்பவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு முதலில் நாவலும் பின்னர் படமும் வெளியாகி உள்ளது.
கவனம் பெற்ற நஜீப்: முன்னதாக யாருக்குமே தெரியாமல் அரபு நாட்டிற்கு சென்று கஷ்டப்பட்டு ஜெயிலுக்கு சென்று பின்பு ஒரு வழியாக நாடு திரும்பிய நஜீப், தற்போது அனைவருக்கும் தெரிந்தவர் ஆகிவிட்டார். ஆடு ஜீவிதம் நாவல், முதலில் ஓரளவுக்கு அவருக்கு பப்ளிசிட்டியை கொடுத்த சூழலில் தற்போது படம் வந்து அனைவரையும் கண்கலங்க வைத்ததுடன் நஜீப்பையும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதுகுறித்து அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். பில்மிபீட் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள இந்த பேட்டியில் தான் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாலைவனத்தில் கஷ்டப்பட்டாலும் தன்னுடைய ஊர் திரும்பியதும் தன்னுடைய மனைவி உள்ளிட்ட யாரிடமும் தான் பட்ட துயரங்களை பகிரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆடு ஜீவிதம் நாவல்: ஆனால் பென் யாமின் எழுத்தில் வெளியான ஆடு ஜீவிதம் நாவல் தன்னுடைய துயரத்தை அனைவருக்கும் ஓரளவிற்கு தெரிய செய்ததாகவும் இந்த நாவலை படித்துவிட்டு தன்னுடைய மனைவி கண்கலங்கியதாகவும் அவருடன் சேர்ந்து தானும் பழைய நிகழ்வுகளை நினைத்து கண்கலங்கியதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். பாலைவனத்தில் தான் இத்தகைய கஷ்டங்களை பட்ட போது தொடர்ந்து பலமுறை சாகும் எண்ணம் வந்ததாகவும் பலமுறை இதற்கு முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே பாலைவனத்தின் மணற்பரப்பில் தான் அப்படியே பல நாட்கள் படுத்து இருப்பேன் என்றும் அப்படியாவது பாம்புகள் வந்து தன்னை கடித்து தான் உயிரிழக்க நேராதா என்று தான் நினைத்ததாகவும் அவர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது என்னுடைய மறுஜென்மம்: தான் பலமுறை இப்படி செய்தும் தான் நினைத்தது நடக்கவில்லை என்றும் அதனால் இது தன்னுடைய மறுஜென்மம் என்றும் அவா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்த படம் முடியும் வரையில் பிரிதிவிராஜ் யார் என்பது தனக்கு தெரியாது என்றும் ஒரு கட்டத்தில் இந்த படம் வெளியானவுடன் தான் அவரை தான் நேரில் சென்று சந்தித்ததாகவும் அவர் தன்னிடம் அங்குபட்ட கஷ்டங்கள் குறித்து பேசி தட்டி கொடுத்ததாகவும் கூறியுள்ளார். தான் பட்ட கஷ்டங்களை பிரித்விராஜ் தன்னுடைய நடிப்பின் வழியே அப்படியே வெளிப்படுத்தியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்விராஜ் குறித்து நஜீப்: இந்த படத்தில் நடிக்கும் போது கொரோனா பிரச்சனையில் அந்த பாலைவனத்திலேயே பிரித்விராஜ் உள்ளிட்ட பட குழுவினர் சிக்கியதை சுட்டிக்காட்டிய அவர் அந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இந்த படத்தில் அவர்கள் நடித்துள்ளதையும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். சவுதியும் நல்ல நாடுதான் என்றும் எல்லா இடத்திலும் கெட்டவர்கள் இருப்பதுபோலத்தான் அங்கேயும் சில கெட்டவர்கள் தன்னை இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார். அந்த மூன்று ஆண்டுகளும் பித்து பிடித்தது போல தான் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே தான் ஆட்டுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக நாவலில் எழுதப்பட்டது உண்மையில்லை என்றும் இதை படித்தபோது தான் மிகுந்த ஆத்திரம் அடைந்ததாகவும் நஜீப் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











