Aadujeevitham: ஆடுஜீவிதம் ரிலீஸ் தேதியில் மாற்றம்... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிருத்விராஜ்!
சென்னை: மலையாள சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம். பிருத்விராஜ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆடுஜீவிதம் என்ற நாவலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்திற்காக பிருத்விராஜ் அசுரத்தனமாக நடித்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த ஆடுஜீவிதம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது.
ஆடுஜீவிதம் புதிய ரிலீஸ் தேதி
மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் பிருத்விராஜ், பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான சலார் சூப்பர் ஹிட் அடித்தது. பிரபாஸ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் பிருத்விராஜ்க்கு மிக முக்கியமான கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மலையாளத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடித்துள்ள ஆடுஜீவிதம் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

வித்தியாசமான கதைகளில் அதிக ஆர்வம் காட்டி வரும் பிருத்விராஜ், கடந்த 5 ஆண்டுகளாக ஆடுஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார். பென்யாமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் நாவல் 2008ம் ஆண்டு வெளியானது. கேரளாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது ஆடுஜீவிதம் நாவல். அரபு நாட்டில் பிழைப்புக்காக செல்லும் நாயகன், பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது.
அங்கிருந்து அவனால் தப்பித்து வர முடியாமல் ஆடுகளுடன் ஒருவனாக மாறும் ஹீரோ, இறுதியில் என்ன ஆனான் என்பதும் தான் ஆடுஜீவிதம் நாவலின் கதை. இந்த நாவலை ஆடுஜீவிதம் என்ற அதே பெயரில் பிளெஸ்ஸி என்பவர் இயக்கியுள்ளார், ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நாவல் ஏற்கனவே அதிக வரவேற்பைப் பெற்றதால் அதனை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்தப் படத்துக்காக உடல் எடையை குறைத்து மெலிந்த தேகத்துடன் ஷூட்டிங் சென்றார் பிருத்விராஜ். ஆனால், அப்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் தொடங்கிய ஆடுஜீவிதம் ஷூட்டிங் கடந்தாண்டு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இந்தப் படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகி கவனம் ஈர்த்தது. முக்கியமாக நாயகி அமலா பால் உடன் பிருத்விராஜ் லிப் லாக் காட்சியில் நடித்ததும் வைரலானது.
ஆடுஜீவிதம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. முதலில் இந்தப் படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் அதற்கு முன்னதாக மார்ச் 28ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் பிருத்விராஜ் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











