ஆகாஷ் பாஸ்கரனைத் தொடர்ந்து ஆர்யா.. சோதனைகளால் சுத்து போடப்படும் தயாரிப்பாளர்கள் தாங்குவார்களா?
சென்னை: நடிகர் மற்றும் தயாரிப்பாளராக உள்ள ஆர்யாவுக்கு சொந்தமாக முன்பு இருந்த சி ஷெல் ஹோட்டலில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் பலரும் ஆர்யாவின் ஹோட்டலில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என்று தகவலை இணையத்தில் பகிர்ந்தனர். வருமான வரித்துறையினர் சோதனை செய்திகளோடு தனது பெயரும் அடிபட்டதால் ஆர்யா பதறிவிட்டார் என்றுதான் கூறவேண்டும். உடனே அவர், தனது சி ஷேல் ஹோட்டலை சில ஆண்டுகளுக்கு முன்னரே, குன்ஹி மூசா என்பவருக்கு விற்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த விளக்கத்திற்குப் பின்னர்தான் ஆர்யா குறித்த தகவல்கள் அடங்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் திரைத்துறையில் இருப்பவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக பல பேச்சுகளை அடுக்கி வருகிறார்கள். அதாவது ஏற்கனவே தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இப்போது ஆர்யாவுக்குச் சொந்தமான ஹோட்டலில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதனால் தயாரிப்பாளர்களை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை டார்கெட் செய்து வருகிறது என்ற பேச்சு திரையுலகில் பரவலாக அடிபடுகிறது.
ஆகாஷ் பாஸ்கரன்: அதாவது தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வருகிற அதே நேரத்தில் அதிக பொருட்செலவில் படம் தயாரிக்கிற தயாரிப்பாளர்களில் ஒருவராக டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளார். ஏற்கனவே டாஸ்மாக்கில் ரூபாய் 1000 கோடிகள் ஊழல் நடந்துள்ளது எனக் கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழலுக்கும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் தொடர்புகள் இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

சீல் நீக்கம்: இதனால் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் அவரது வீட்டிற்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த ஆகாஷ் பாஸ்கரன், தனது வீட்டின் மீது சீல் வைக்கப்பட்டதை அகற்றச் சொன்னார். இது தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆகாஷ் பாஸ்கரன் மீது அமலாக்கத்துறை எடுத்துள்ள நடவடிக்கைக்கும் அவருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை எனக் கூறியது மட்டுமில்லாமல், அமலாக்கத்துறைக்கு பூட்டியுள்ள வீட்டினை சீல் வைக்க எந்த அதிகாரமும் இல்லை கூறி சீல் வைக்கப்பட்டதையும் நோட்டீஸ் ஒட்ட பட்டதையும் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆர்யா: தயாரிப்பாளர்களில் ஆகாஷ் பாஸ்கரன், ஆர்யா போன்ற தயாரிப்பாளர்களை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை டார்கெட் செய்கிறதோ என்ற பேச்சு திரைத்துறையில் எழுந்துள்ளது. சீ ஷெல் உணவகம் சென்னையில் மட்டும் சுமார் 5 இடங்களில் உள்ளது. குறிப்பாக அண்ணா நகர், கீழ் பாக்கம், கொட்டிவாக்கம் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளது. நடிகர் ஆர்யா மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் உலா வந்த நிலையில், சீ ஷெல் உணவகங்களில் சோதனை நடந்ததால் பலரும் ஆர்யா வருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துவிட்டார் என்று பேசிவந்தார்கள். ஆனால் இது போன்று தன்னைப் பற்றி உண்மைக்கு மாறான தகவல்கள் வந்து கொண்டு இருந்ததை கவனித்த நடிகர் ஆர்யா உடனே தனது சி ஷேல் ஹோட்டலை சில ஆண்டுகளுக்கு முன்னரே குன்ஹி மூசா என்பவருக்கு விற்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











