Aalavandhan vs Muthu: மீண்டும் ரஜினியை ஓரங்கட்டிய கமல்.. முத்து vs ஆளவந்தான் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து, உலகநாயகன் கமல்ஹாசனின் ஆளவந்தான் படங்கள் கடந்த வாரம் வெளியாகின. இதில், முத்து படத்தை விட ஆளவந்தான் தான் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியை ஓரங்கட்டிய கமல்
சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் ஒன்றாக இணைந்து நடித்த இருவரும், அதன் பின்னர் தனி ரூட்டில் பயணிக்கத் தொடங்கினர். அதேநேரம் இருவரது படங்களும் ஒரே தேதியில் வெளியாகி வந்தன. இறுதியாக ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் 2005ம் ஆண்டு வெளியாகின.
அதன்பின்னர் இருவரது படங்களும் ஒரே தேதியில் வெளியாகவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் 8ம் தேதி, ரஜினியின் முத்து, கமலின் ஆளவந்தான் படங்கள் ரீ ரிலீஸாகின. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீஸானதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகமாகினர். ரஜினியின் முத்து படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார்.
அதேபோல், கமலின் ஆளவந்தான் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களும் 4கே, 5.1 என டெக்னிக்கலாக பல புதிய மாற்றங்களோடு வெளியாகின. இந்நிலையில் முத்து, ஆளவந்தான் என இரண்டு படங்களுக்குமே 2கே கிட்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனாலும், முத்துவை விட கமலின் ஆளவந்தான் தான் மேக்கிங் உட்பட அனைத்திலும் மாஸ் காட்டியுள்ளதாம்.
கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் கமல்ஹாசன் படங்கள் மீதான எதிர்பார்ப்புகளும், அவரது பழைய படங்கள் குறித்த விவாதங்களும் அதிகரித்துள்ளன. அதனால் ஆளவந்தான் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கியமாக ஆளவந்தான் ஒரிஜினல் வெர்ஷனில் இருந்து 50 நிமிடங்கள் எடிட் செய்யப்பட்டு ரீ ரிலீஸாகியுள்ளது. இதனால், இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகியுள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று தினங்களில் ரஜினியின் முத்து திரைப்படம், 6 முதல் 7 லட்சங்கள் வரை வசூல் செய்துள்ளதாம். ஆனால் கமலின் ஆளவந்தான் அதே மூன்று தினங்களில் 15 லட்சத்துக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தமிழ்நாட்டில் மட்டும் கணக்கெடுக்கப்பட்ட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளவந்தான் திரைப்படம் ஆயிரம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ரஜினியின் பாபா, கமலின் வேட்டையாடு விளையாடு படங்கள் ரீ ரீலீஸாகின. அப்போதும் கமலின் வேட்டையாடு விளையாடு தான் வசூலில் மாஸ் காட்டியது.


Click it and Unblock the Notifications











