"லோகேஷ், நெல்சன் போன்றவர்களுக்கு மேக்கிங் தெரியல.. வன்முறை தான் படமா..?” விளாசிய பாலிவுட் பிரபலம்!
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் இளம் இயக்குநர்களின் சினிமா மேக்கிங் குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார்.

இளம் இயக்குநர்களை விளாசிய அமீர்கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான், தற்காலிகமாக நடிப்பில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்திருந்த அவர் மழை வெள்ளத்தில் சிக்கினார். இதனையடுத்து அமீர்கான், விஷ்ணு விஷால் உள்ளிட்ட சிலரை மீட்க அஜித்குமார் உதவியது குறிப்பிடத்தக்கது. அப்போது அஜித்துடன் அமீர்கான், விஷ்ணு விஷால் ஆகியோர் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலானது.
இந்நிலையில், இளம் இயக்குநர்களின் சினிமா மேக்கிங் குறித்து அமீர்கான் விமர்சனம் செய்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. தமிழில் சமீபத்தில் வெளியான ஜெயிலர், லியோ படங்களில் வன்முறை காட்சிகள் அதிகம் இருந்தன. அதேபோல், பாலிவுட்டில் தற்போது வெளியாகியுள்ள அனிமல், தெலுங்கில் ரிலீஸாகவுள்ள சலார் ஆகிய படங்களிலும் வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ படங்கள் வெளியான போதே ரசிகர்களிடம் இருந்து அதிக விமர்சனங்கள் எழுந்தன. அதாவது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதிக வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், ரத்தம் தெறிக்கும் காட்சிகளை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் பார்க்க முடியவில்லை எனவும் கூறியிருந்தனர். அதேபோல், கடந்த வாரம் வெளியான விஷாலின் ரத்னம் பட டீசரும் அதிக விமர்சனத்துக்குள்ளானது.
இதனிடயே இந்தியில் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்திலும் ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்தும் நெட்டிசன்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், இதுபோன்ற படங்களுக்கு சென்சார் அனுமதி கொடுக்கக் கூடாது எனவும் குரல்கள் எழுந்தன. இதனையடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானும் மிக காட்டமாக விமர்சித்துள்ளார்.
நெல்சன், லோகேஷ் கனகராஜ், அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா போன்ற இயக்குநர்களுக்கு மேக்கிங் தெரியவில்லை என்றுள்ளார். அதீத வன்முறை, செக்ஸுவல் காட்சிகள் மட்டும் தான் படமா, கதை இல்லாமல் எப்படி படம் எடுக்கிறார்கள் என காட்டமாக விமர்சித்துள்ளார். லகான், ரங் தே பசந்தி, பிகே போன்ற தரமான படங்களில் நடித்து பிரபலமானவர் அமீர்கான்.


Click it and Unblock the Notifications











