அமீர் கான் மற்றும் மனைவி கிரண் ராவ் விவாகரத்து அறிவிப்பு.. 15 ஆண்டு கால உறவு முடிவுக்கு வந்தது!
மும்பை: பிரபல பாலிவுட் கான் நடிகர் அமீர் கான் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.
இருவரும் மனப்பூர்வமாக பிரிவதாக இன்று திடீரென வெளியாகி உள்ள அறிக்கை நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
ஏற்கனவே நடிகர் அமீர் கான் ரீனா தத்தா என்பவரை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

அமீர் கான் விவாகரத்து
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்யப் போவதாக அதிரடியாக இன்று அறிவித்துள்ளார். இருவரும் மனப்பூர்வமாக பிரிவதாகவும் இருவரும் இணைந்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

15 ஆண்டுகள்
கடந்த 2005ம் ஆண்டு கிரண் ராவை திருமணம் செய்து கொண்டார் நடிகர் அமீர் கான். சுமார் 15 ஆண்டு காலம் இருவரும் இணை பிரியாமல் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது திடீரென இந்த விவாகரத்து அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இரண்டாவது மனைவி
1986ம் ஆண்டு தயாரிப்பாளர் ரீனா தத்தாவை திருமணம் செய்து கொண்ட ஆமிர்கான். 2002ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அமீர் கான் - ரீதா தத்தா தம்பதியினருக்கு இரா கான், ஜுனைத் கான் என ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இரண்டாவது மனைவியாக கிரண் ராவை திருமணம் செய்து கொண்டார் ஆமிர்கான்.

இருவரும் இணைந்து
அமீர் கான் - கிரண் ராவ் தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் உருவான ஆசாத் எனும் மகன் ஒருவர் உள்ளார். நாங்கள் இருவரும் கணவன் - மனைவியாக இனி வாழப் போவதில்லை என்றாலும், இருவரும் இணைந்து ஆசாத்துக்கு பெற்றோர்களாக தொடர்வோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய தொடக்கம்
நீண்ட காலமாகவே விவாகரத்து செய்து பிரிய வேண்டும் என நினைத்து வந்தோம். இந்த விவாகரத்து ஒரு முடிவு இல்லை. புதிய தொடக்கம் என இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து ரசிகர்களை நல்லாவே குழப்பி உள்ளனர்.

லால் சிங் சத்தா
நடிகர் அமீர் கான், கரீனா கபூர் நடிப்பில் உருவாகி வரும் லால் சிங் சத்தா திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற Forest Gump படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய படம் வெளியாகவுள்ள நிலையில், திடீரென இருவரும் பிரிந்திருப்பது ஏகப்பட்ட சந்தேகங்களையும் கிளப்பி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











