Coolie: தலைவர் நிரந்தரம்.. எதிர்க்க யாரு வந்தாலும் ஒரு கை பார்க்க ரஜினியின் கூலி ரெடி.. மாஸ் அப்டேட்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கூலி. இந்த படம் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்து போஸ்ட் புரெடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டு உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் படத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 171வது படம் ஆகும். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைகிறார் என்ற போதே ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. படத்தின் அறிவிப்பு வீடியோவில் இருந்து படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு விருந்து வைத்தது போல இருந்தது. குறிப்பாக படத்தில் யார் யார் நடிக்கிறார்கள், அதில் யார் யாருக்கு என்னென்ன பெயர் என படக்குழு வெளியிட்ட அப்டேட்க்கு ரசிகர்கள் தரப்பில் தனி வரவேற்பு கிடைத்தது.

அமீர் கான்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கு படத்தில் தேவா என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் படத்தில் சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜுனா, ஷோபின் சாகிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அரசல் புரசலாக இருந்து வந்த தகவல் படத்தில் அமீர் கான் நடித்து வருகிறார் என்பதுதான். ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லாததால், அந்த பேச்சு அப்படியே அடங்கிவிட்டது. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
மாஸ் அப்டேட்: அதில் அமீர் கான் புகை பிடித்துக் கொண்டு இருப்பது போல நின்று கொண்டு உள்ளார். மேலும் அவரது கதாபாத்திரத்தின் பெயர் தாஹா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கையில் அவரும் கோல்டன் வாட்ச் கட்டியுள்ளார். இந்த மாஸ் அப்டேட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுத்துள்ளது. காரணம் கூலி படம் வெளியாகவுள்ள தினமான ஆகஸ்ட் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் ஹர்திக் ரோஷன் மற்றும் டோலிவுட் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள வார் 2 படமும் வெளியாக உள்ளது.
1000 கோடிகள் வசூல்: இதனால் கூலி படத்திற்கு வட மாநிலங்கள், தெலங்கானா மற்றும் ஆந்திராவில் போதுமான அளவுக்கான தியேட்டர்கள் கிடைக்குமா என்ற கேள்வி ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. இப்படி இருக்கும்போது, படத்தில் அமீர் கான் நடித்துள்ளார் என்ற தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்ட பின்னர் மொத்த ரசிகர்கள் கூட்டமும் உற்சாக வெள்ளத்தில் இருக்கிறார்கள். அதாவது, படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதால் படத்தின் வியாபாரம் வேற லெவலில் இருக்கும். தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடிகள் வசூல் செய்த படமாக கூலி படம் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் நம்பிக்கையில் உள்ளர்கள்.


Click it and Unblock the Notifications











