பக்கவாதம் ஏற்பட்டு துடித்த 'தங்கல்' பிரபலம்: நள்ளிரவில் ஓடி வந்து உதவிய 'கஜினி'
மும்பை: பக்கவாதம் ஏற்பட்டு அவதிப்பட்ட தேசிய விருது பெற்ற சவுண்டு என்ஜினியருக்கு உதவி செய்துள்ளார் பாலிவுட் நடிகர் ஆமீர் கான்.
பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான தங்கலில் பணியாற்றியவர் தேசிய விருது பெற்ற சவுண்டு என்ஜினியரான சஜித் கொயேரி. கடந்த 6ம் தேதி அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.
உடனே அவரது குடும்பத்தார் அவரை மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சஜித்
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்த பிறகு சஜித்தை டாக்டர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. டாக்டர் யாரும் வராததால் பல மணிநேரமாக அவதிப்பட்டுள்ளார் சஜித். இப்படியே விட்டால் அவரின் நிலைமை மோசமாகிவிடுமே என்று குடும்பத்தினர் கவலை அடைந்தனர். அந்த மருத்துவமனை டாக்டர்களை நம்பி புண்ணியம் இல்லை என்று வேறு வழிவகை செய்ய யோசித்தனர்.

ஆமீர் கான்
சஜித் குடும்பத்தாருக்கு ஆமீர் கான் நினைவு வந்தது. நள்ளிரவு என்பதால் அவருக்கு போன் பண்ணலாமா வேண்டாமா என்று முதலில் யோசித்தனர். ஆனால் நிலைமை மோசமானதால் ஆமீர் கானுக்கு போன் செய்து தகவல் கொடுத்தனர். நள்ளிரவு என்றும் பாராமல் ஆமீர் உடனே அந்த மருத்துவமனைக்கு விரைந்து வந்தார்.

சிகிச்சை
சஜித்தை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அட்மிட் செய்தார் ஆமீர். அந்த மருத்துவமனையின் உரிமையாளரான தனது நண்பரும், தொழில் அதிபருமான அனில் அம்பானிக்கு போன் செய்து சஜித்துக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து சஜித்தின் சிகிச்சை துவங்கி காலை 3 மணி அளவில் அவரின் நிலைமை சீரடைந்தது.

மகிழ்ச்சி
தன் படத்தில் பணியாற்றிய சவுண்டு என்ஜினியருக்காக ஆமீர் கான் இரவில் ஓடோடி வந்து உதவி செய்த தகவல் அறிந்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆமீர் கான் உங்களின் செயல் குறித்து அறிந்து உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் மேலும் அதிகரித்துவிட்டது என்று ரசிகர்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











