கொரோனா பீதிக்கு இடையிலும்.. துருக்கியில் தொடங்கியது.. விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி பட ஷூட்டிங்!
மும்பை: விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் இந்தி படத்தின் ஷூட்டிங், துருக்கியில் தொடங்கி இருக்கிறது.
தமிழில் நடித்துவரும் விஜய் சேதுபதி தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே ஆமிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற இந்திப் படத்திலும் முக்கியமான கேரக்டரில் அவர் நடிக்கிறார்.

நடிகர் அக்ஷய் குமார்
இந்தப் படத்தின் ஷூட்டிங், கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த 5 மாதமாக தடைபட்டிருந்தது. இந்நிலையில் இப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மீண்டும் படப்பிடிப்பை சிலர் தொடங்கியுள்ளனர். பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார், தனது பெல்பாட்டம் படத்தின் ஷூட்டிங்கை இங்கிலாந்தில் தொடங்கியுள்ளார். இதற்காக நடிகை ஹூமா குரேஸி உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து சென்றனர்.

லால் சிங் சத்தா
நடிகர் சுதீப் தனது 'பாண்டம்' படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் தொடங்கியுள்ளார். கே.ஜி.எப் சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங் வரும் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் ஆமிர்கான் தனது லால் சிங் சத்தா படத்தின் படப்பிடிப்பை துருக்கியில் தொடங்கி உள்ளார். துருக்கியில் நடிகர் ஆமிர் கான் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

பாரஸ்ட் கம்ப் ரீமேக்
ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படம், பாரஸ்ட் கம்ப். டாம் ஹாங்ஸ், ராபின் ரைட், கேரி சினிஸ், சல்லி ஃபீல்ட் உட்பட பலர் நடித்திருந்தனர். ராபர்ட் ஸெமக்கிஸ் இயக்கிய இந்தப் படம் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 6 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. 1994 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தைதான் ஆமிர்கான் லால் சிங் சத்தா என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்கிறார். அவரே தயாரிக்கிறார்.

விஜய் சேதுபதி
இதில் கரீனா கபூர், விஜய் சேதுபதி, மோனா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அத்வைத் சந்தன் இயக்குகிறார். லாக்டவுனுக்கு முன் டெல்லி, ராஜஸ்தான், சண்டிகர், கேரளா, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. எல்லையில் சீன ராணுவத்தால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக லடாக்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

துருக்கியில் ஷூட்டிங்
இப்போது இதன் ஷூட்டிங் துருக்கியில் தொடங்கியுள்ளது. அங்கு ரசிகர்களுடன் ஆமிர் கான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. துருக்கி படப்பிடிப்பைத் தொடர்ந்து ஜார்ஜியாவிலும் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. கிறிஸ்துமஸுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த இந்தப் படம் கொரோனா காரணமாக தள்ளிப் போகும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











