கொரோனா லாக்டவுனால்.. தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் இன்னொரு நடிகர்.. பாராட்டும் ரசிகர்கள்!
மும்பை: கொரோனா காரணமாக இன்னொரு நடிகர் ஒருவரும் தள்ளுவண்டியில் காய்கறி விற்று வருகிறார்.
உலகையே மிரட்டிக் கொண்டிருக்கிறது கொரோனா. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

லாக்டவுன் நீட்டிப்பு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆக உயர்ந்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் முயற்சி எடுத்தாலும் தொடர்ந்து இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுனை தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் அடுத்த மாதம் 31 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளன.

விதிவிலக்கல்ல
இதனால் பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்குபவர்கள், சின்ன சின்ன தொழில் செய்பவர்கள் கடும் கஷ்டத்தில் உள்ளனர். அவர்கள் அடுத்த வேளை உணவுக்கு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சினிமா நடிகர், நடிகைகளும் விதிவிலக்கல்ல. சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் நடிகர்கள், சினிமா தொழிலாளர்கள் கடும் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி உள்ளனர்.

வறுமை காரணமாக
இதனால், அவர்கள் வேறு தொழிலைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் சில நடிகர்கள், காய்கறிகள் விற்று வருகின்றனர். மராத்தி நடிகர் ரோஹன் பட்னேகர், வறுமை காரணமாக கருவாடு விற்று வருகிறார். டிவி நடிகர், கரண் காண்டேல்வால் மும்பையில் தாக்குப்பிடிக்க முடியாமல் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். இவரைப் போல மேலும் பல நடிகர், நடிகைகளும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

நடிகர் ஜாவேத் ஹைதர்
மற்றொரு மராத்தி நடிகர் ரோஷன் சின்கே புனேவில் காய்கறி விற்று வருகிறார். இந்நிலையில் இன்னொரு இந்தி பட நடிகர் ஜாவேத் ஹைதர், தள்ளுவண்டியில் காய்கறி விற்கிறார். அவர், சல்மான் கானின் தபாங் 3, ஆமிர்கான், ராணி முகர்ஜி நடித்த குலாம், பாபர், லைஃப் கி ஐஸி கி தைஸி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ஜியான்னி அவுர் ஜூஜூ என்ற டிவி தொடரிலும் நடித்துள்ளார்.

நம்பிக்கை இழக்காமல்
இவர் காய்கறி விற்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சில நெட்டிசன்கள், இந்த இக்கட்டான நிலையில், நேர்மறையான உங்கள் செயலை மதிக்கிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்' என்று தெரிவித்துள்ளனர். ஒருவர், நம்பிக்கையை இழக்காமல் நீங்கள் செய்கிற இந்த விஷயம் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கின்றன. குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள என்ன முடியுமோ அதை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











