அம்மாவிடம் பேசினால்கூட ஜெயம் ரவிக்கு பொசசிவ்தான்.. ஓபனாக பேசிய ஆர்த்தி.. ஒன்னொன்னா வெளியே வருதே
சென்னை: கோலிவுட்டில் கடந்த இரண்டு நாட்களாக தலைப்பு செய்தியாக இருப்பது ஜெயம் ரவி விவாகரத்து விவகாரம். திருமண வாழ்க்கையிலிருந்து தான் விலகுவதாக ஜெயம் ரவி அறிவிக்க; இந்த முடிவு தனது கவனத்துக்கே வரவில்லை என்று ஆர்த்தி இன்று விளக்கம் கொடுக்க என பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதற்கிடையே ஜெயம் ரவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுவையும் தாக்கல் செய்திருக்கிறார்.
ஜெயம் ரவி கடந்த ஒன்பதாம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், "வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்,
ஆர்த்தியின் விளக்கம்: ஜெயம் ரவியின் அந்த அறிக்கை பெரும் பேசுபொருளானது. இந்தச் சூழலில் ஆர்த்தி இதுகுறித்து இன்று விளக்கமளித்திருந்தார். அதில் அவர், "ஜெயம் ரவியின் முடிவு தனது கவனத்துக்கே வரவில்லை. அது தனிப்பட்ட முடிவு. பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம்" போன்ற அம்சங்களை குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து விவாகரத்து முடிவை ஜெயம் ரவி தனித்தே எடுத்திருக்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
குழந்தைகள்?: மேலும் ஜெயம் ரவி நினைத்திருந்தால் இந்தப் பிரச்னையை பேசி முடித்திருக்கலாமோ என்று ஆர்த்தியின் விளக்கம் வந்த பிறகு பலரும் கேள்விகளை எழுப்பிவருகின்றனர். இதற்கிடையே விவாகரத்து கோரி ஜெயம் ரவி நீதிமன்றத்தில் மனுவையும் தாக்கல் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெயம் ரவி பற்றி ஆர்த்தி பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
ஆர்த்தி பேசியது: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு ஜெயம் ரவியும், ஆர்த்தியும் சேர்ந்து அளித்த பேட்டியில் பேசிய ஆர்த்தி, "வீட்டில் ஜெயம் ரவி 100 சதவீதம் கணவராக நடந்துகொள்வார். காதலிக்கும்போது என்னை ராணி போல் பார்த்துக்கொள்வேன் என்று சொன்னார். அதன்படிதான் பார்த்துக்கொள்கிறார். ஆனால் ஒன்று எனது தாயிடம் பேசினால்கூட பொசசிவ் கொள்வார்" என்று குறிப்பிட்டார்
. அதற்கு பதிலளித்த ரவியோ, "வேறு யாரிடம் பேசினால் கூட பொசசிவ் ஆகமாட்டேன். என்னிடம் சொல்லாத விஷயங்களைக்கூட அவர் அவரது அம்மாவிடம்தான் சொல்வார். அப்போ நான் பொசசிவ்தானே ஆவேன்" என்று தெரிவித்தார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், ஆர்த்தியின் விளக்கத்தையும், அந்த வீடியோவில் ஆர்த்தி - ரவி பேசியதை வைத்து பார்க்கும்போது யார் பக்கம்தான் பிரச்னை இருக்கிறது என்பது தெரியவே இல்லையே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











