Aarti - Ravi: ஒத்த ரூபாய்க்கு ஆதாரம் இருக்கா மாப்பிள்ளை.. ஜெயம் ரவிக்கு பதிலடி கொடுத்த ஆர்த்தியின் தாயார்
சென்னை: நடிகர் ஜெயம் ரவி ( ரவி மோகன்) ஆர்த்தி விவாகரத்து விவகாரம் பொது வெளியில் மிகத் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இத்தனை நாட்களாக ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் தங்களது எண்ண ஓட்டங்களை சொல்லி வந்தார்கள். இதனால் பலரும் மாறி மாறி இருவரையும் விமர்சித்து வந்தார்கள். இப்படியான நிலையில் ஆர்த்தி தாயார் சுஜாதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை, ஜெயம் ரவிக்கு சவால் விடும் தொனியிலும், அவரை தனது மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்னிருத்தி வந்துள்ளது.
ஜெயம் ரவி சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட தனது அறிக்கையில், " எனது முன்னாள் மனைவி ஆர்த்தி, ஆர்த்தியின் அம்மா மற்றும் ஆர்த்தியின் குடும்பம் என மொத்த குடும்பமும் என்னை எப்போதும் பணத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள். அவர்கள் நான் சம்பாதித்த பணத்தில் இருந்து ஒரு சல்லி பைசா கூட எனது பெற்றோர்களுக்கு செலவு செய்ய விட்டதில்லை. அவர்களுக்கு எப்போதும் பணம், பணத்திற்கு உத்தரவாதம் போன்ற விஷயங்களுக்கு மட்டும் நான் தேவை" என்று பதிவிட்டார்.
இப்படியான நிலையில் இன்று அதாவது மே மாதம் 17ஆம் தேதி ஆர்த்தியின் தயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் வெளியிட்டுள்ள நான்கு பக்க அறிக்கை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அவரது அறிக்கையின் இரண்டாவது பக்கத்தில் இருந்து மூன்றாவது பக்கம் வரை அவர் ஜெயம் ரவியின் குற்றசாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஆர்த்தியின் தாயார்: அதாவது, " அடங்க மறு, பூமி மற்றும் சைரன் என மூன்று திரைப்படங்களை தொடர்ந்து என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்களை கதாநாயகனாக வைத்து எடுத்தேன். இந்த படங்களுக்காக கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கும் மேலாக பைனான்சியர்களிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறேன் அந்தப் பணத்தில் 25 சதவிகிதத்தை திரு ஜெயம் ரவி அவர்களுக்கு ஊதியமாக வழங்கி உள்ளேன். இதற்கு என்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்குக்கு செலுத்திய பரிமாற்றம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளது.இப்பொழுது திரு ஜெயம் ரவி அவர்கள் இந்தப் படங்களின் வெளியீட்டின் போது அவரை நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை.
மன உளைச்சல்: அவரை வெறும் கதாநாயகனாக மட்டுமே நான் பார்த்திருந்தால் கூட அப்படி நிர்பந்தப்படுத்தி இருக்க மாட்டேன். ஆனால் அவரை என் மாப்பிள்ளை என்பதைத் தாண்டி என் சொந்த மகனாகவே கருதினேன் அதனால் அவருக்கு எந்த ஒரு கஷ்டமும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு பெண் என்ற நிலையையும் கடந்து ஒவ்வொரு படம் வெளியிடும் போதும் விடியற்காலை ஐந்து மணி வரை வாங்கிய கடனுக்காக கிட்டத்தட்ட ஒரு வெள்ளை சுவரை தவிர பைனான்சியர்கள் நீட்டும் எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும்,மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக் கொண்டேன்.

ஆதாரம்: மாறாக அவர் சொன்னது போல் அவரை நிர்பந்தப்படுத்துவதற்காக அல்ல. திரு ஜெயம் ரவி அவர்கள் சொன்னது போல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு நான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான, வேண்டாம் ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை, அப்படி ஒன்று இருந்தால் அதை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும் என இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு இணையவாசிகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. ஆர்த்தியின் அறிக்கைக்கு பதில் கொடுத்த ஜெயம் ரவி, ஆர்த்தியின் அம்மாவின் அறிக்கைக்கு பதில் கொடுப்பாரா என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications











