Aarti Ravi: ஒரு வருஷமா மகன்களுக்காக அமைதியா இருந்தேன்.. இன்னைக்கு உலகமே பார்க்குது.. ஆர்த்தி ரவி ஆதங்கம்!
சென்னை: விவாகரத்து வழக்கு ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இன்னமும் எங்களுக்கு விவாகரத்து வழங்கப்படவில்லை. ஆனால், இன்று உலகமே பார்க்கும்படி நடக்கும் விஷயங்கள் என்னையும் என் குடும்பத்தையும் நிலைகுலைய செய்துள்ளது. 18 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த நபர் அனைத்தையும் உதைத்து எறிந்துவிட்டு சென்றுவிட்டார்.
என்னுடைய இரு மகன்களுக்காக இதுநாள் வரை எதையும் வெளியே சொல்ல முடியாமல் மெளனமாக அவர்களின் அமைதிக்காக பொறுமையுடன் காத்திருந்தேன். ஆனால், இன்று என்னால் ரியாக்ட் செய்யாமல் இருக்க முடியவில்லை என இரண்டு பக்கத்துக்கு இன்ஸ்டாகிராமில் பொங்கி தள்ளியுள்ளார்.

ஜெயம் ரவி என்கிற பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டு நடித்து வரும் ரவி மோகன் இன்று பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் உடன் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ஜோடியாக கலந்துக் கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ஆர்த்தி ரவி தனது மகன்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
கெனிஷாவின் கையை பிடித்துக்கொண்டு: நடிகர் ரவி மோகன் ஆர்த்தி ரவியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாடகி கெனிஷாவுடன் ஹீலிங் சென்டர் வைக்கப் போவதாகவும் அவருடன் கோவாவுக்கு செல்லவில்லை என்றும் அவர் தான் விவாகரத்துக்கு காரணம் என பேசுவது எல்லாம் தவறான ஒன்று என பேசியிருந்த ரவி மோகன் இன்று ஐசரி கணேஷ் மகளின் திருமண விழாவில் மாப்பிள்ளை கணக்கா கெனிஷாவுடன் வந்ததை பார்த்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆர்த்தி ரவி ஆதங்கம்: சாதாரண ரசிகர்களுக்கே ஷாக்கை கொடுத்தது என்றால் திருமணமாகி 18 ஆண்டுகள் குடும்பம் நடத்திய ஆர்த்தி ரவியின் நிலைமை எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள், இதுநாள் வரை என்னோட மகன்களுக்காக அமைதி காத்து வந்தேன் என ஒட்டுமொத்தமாக தனது மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார் ஆர்த்தி ரவி.
விவாகரத்து இன்னும் ஆகல: சட்டப்படி எங்கள் இருவருக்கும் இன்னமும் விவாகரத்து ஆகவில்லை. அதனால், தயவு செய்து மீடியா நண்பர்கள் என்னை ரவி மோகனின் எக்ஸ் மனைவி என சொல்ல வேண்டாம் என ஏ.ஆர். ரஹ்மான் மனைவி சொன்னதை போலவே அழுத்தம் திருத்தமாக பதிவிட்டுள்ளார். மேலும், பெயரை மாற்றிக் கொள்ளலாம், பட்டு வேட்டி பட்டுச் சட்டை அணிந்துக் கொண்டு புதிய பெயருடன் உலா வரலாம். ஆனால், என்றைக்குமே உங்களை அப்பா என அழைக்கும் அந்த 2 ஆண் குழந்தைகளுக்கு நீங்கள் அப்பா என்பதை மறந்து விடாதீர்கள். இந்த பதிவையும் நான் என் மகன்களுக்காகத்தான் பதிவிடுகிறேன் என பொங்கி எழுந்துள்ளார்.
மகன்களுக்காக மட்டுமே: விவாகரத்து என்றால் என்ன? சட்ட நடவடிக்கைகள் என எதுவுமே தெரியாத 14 மற்றும் 10 வயது மகன்களுக்கு பல மாதங்களாக ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கதையை சொல்லி சமாளித்து வந்தேன். ஆனால், இன்று உலகமே பார்க்கும் அளவுக்கு உங்களின் நடவடிக்கை இருந்தது ரொம்பவே அதிர்ச்சியை அளிக்கிறது. நான் கண் கலங்கி இந்த பதிவை போடவில்லை, ஒரு அம்மாவாக இதை பதிவிடுகிறேன். எந்தவொரு பொறாமையோ, பழிவாங்கும் நடவடிக்கையோ கிடையாது. ஆனால், தந்தை என்கிற கடமையை துச்சமாக தூக்கி எறிந்துவிட்டு செல்லும் உங்களை இந்த பிரபஞ்சம் சும்மா விடாது என்றைக்கும் நான் ஆர்த்தி ரவியாகத்தான் இருப்பேன் என பதிவிட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் பலரும் ஒரு தாயின் அழுகுரலுக்காக அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











