அபிநய் உருகி உருகி காதலித்தான்.. அன்று நிராகரித்தேன்.. இன்று காதலிக்கிறேன்.. திருமணமான நடிகை எமோஷனல்
சென்னை: நடிகர் அபிநய் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி பிறகு சில படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கிய அவர் தீவிர மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் துணை நடிகை ஸ்ரீ அஸ்வினியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் அபிநய்யும் நடிகராக அறிமுகமானார். அப்படத்துக்கு பிறகு கண்டிப்பாக அவர் பெரிய நடிகராக வருவார் என்றுதான் எல்லோரும் கணித்தார்கள். சில படங்களில் நடிக்கவும் செய்தார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இருந்தாலும் நடிப்பை விடாமல் விளம்பர படங்களில் நடித்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் மன அழுத்தமே மிஞ்சியது.
சினிமாவில்தான் வேலை: சினிமாவை அவர் ரொம்பவே விரும்பியதன் காரணமாக அந்தத் துறையில் கிடைத்த வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தார். அந்தவகையில் பையா, துப்பாக்கி ஆகிய படங்களுக்கு டப்பிங்கும் பேசினார். இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் அவர் மதுவுக்கும் அடிமையானார். இதன் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது. கலக்கப்போவது யாரு பாலா, தனுஷ் உள்ளிட்டோர் உதவியும் செய்தார்கள்.

உயிரிழந்த அபிநய்: கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த அவர் பழையபடி தெம்பாக மாறிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உடல்நல குறைவால் சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் அபிநய் பற்றி துணை நடிகை ஸ்ரீ அஸ்வினி என்பவர் போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " உருகி உருகி காதலித்தான்..அவன் காதலை நிராகரித்தேன்..நான் பயப்படுகிறேன் என நினைத்து அவன் அம்மாவையும் அழைத்து வந்தான். உண்மையில் இப்போதுதான் பயம் இன்னும் அதிகரித்தது..பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டோம்.
ஆனால் அவன் மீது காதல் வரவில்லை பயம்தான் அதிகரித்தது. என் பயத்திற்கு காரணம் அவன் அழகு. இவ்வளவு அழகாக இருப்பவன் என்னை ஏன் காதலிக்க வேண்டும் என்று என்மீதான தாழ்வு மனப்பான்மை. காதல் வேண்டாம் அபி நட்பே போதும் என்றேன், மறுத்தான் எவ்வளவோ சொன்னேன் குடிப்பழக்கத்தை விடும்படி அவன் கேட்கவில்லை. அம்மாதான் பாவம். உன்னை திருமணம் செய்தால் அவன் திருந்திவிடுவான் நீ வருந்தாதே நான் இருக்கிறேன் என்று சொன்னார்கள். அவனையும் குடியை விட சொல்லி கெஞ்சினார்கள், முடியாது என்று மறுத்தான்.
மதுவை பற்றிக்கொண்டான்: காதலா மதுவா என்ற போராட்டத்தில் மதுவை மட்டும் பற்றிக்கொண்டான். அன்று நடந்த சண்டை நான் செத்தாகூட என் முகத்தில் முழிக்காதே நீ செத்தாலும் நான் வருவேன் என்று நினைக்காதே என்று சொல்லி சண்டையிட்டு பிரிந்தோம் உன்னுடன் நட்புகூட வேண்டாம் என்று .எவ்வளவோ அம்மா முயற்சி செய்தார்கள் என் மனம் இடம் தரவில்லை அவனை ஏற்க்க..ஒரு கட்டத்தில் அழைத்தான் அம்மாவும் போய் சேர்ந்து விட்டார்கள்.
இன்று காதல் வந்திருக்கிறது: நீ சொன்னதை கேட்காமல் இன்று உன் நினைவுகளோடு தவிக்கிறேன் வருகிறாயா என்று. சொல் பேச்சு கேட்காமல் நீ மதுவை நாடி என் மனதை நோகடித்தாய். மன்னித்துவிடு எனக்கு மணமாகிவிட்டது என்றேன். இருப்பினும் அழைத்தான் நீ சொன்னதைபோல் குடியால் நோயில் அவதிப்படுகிறேன் என் நிழலைக்கூட நீ பார்க்காதே கவலையும் படாதே இது என்னக்கு ஒரு பாடம் குடியால் வாழ்பவர்களுக்கு என் சாவு ஒரு பாடமாக இருக்கும் என்றான். அன்று வராத காதல் இன்று அவன் மீது வந்திருக்க அவனோ காற்றோடு கலந்திருந்தான்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











