விருதை பணம் கொடுத்து வாங்கினேனா?.. அபிஷேக் பச்சன் உச்ச்க்கட்ட வேதனை.. என்ன சொல்லிருக்கார் பாருங்க
மும்பை: அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் I Want To Talk என்ற படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதை வென்றார். ஆனால் அந்த விருதை அவர் திறமையால் வெல்லவில்லை பணம் கொடுத்தும், பிஆர் வேலைகள் செய்தும்தான் வாங்கினார் என்று சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் அதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார் அபிஷேக் பச்சன்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் அமிதாப் பச்சன். அவரது மகனான அபிஷேக் பச்சனும் தந்தை வழியில் நடிப்பு துறையை தேர்ந்தெடுத்தவர். 2000ஆம் ஆண்டு வெளியான Refugee என்ற படத்தில் நடித்து ஹீரோ பயணத்தை தொடங்கிய அவர் வரிசையாக பல படங்களில் நடித்தார். இருந்தாலும் அவரது ஆரம்பகால கரியர் பெரிய திருப்தியை கொடுக்கவில்லை. ஆனாலும் விடாமுயற்சியோடு தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார்.
நல்ல நடிகர்: தனது திறமைக்கு தீனி போடும் விதமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த அவருக்கு ஒருகட்டத்தில் வெற்றிகள் வர ஆரம்பித்தன. அப்படி அவர் நடித்த ரன், தூம், குரு உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து ஹிட்டாகின. இதனால் போட்டிமிகுந்த பாலிவுட் திரைத்துறையில் தனக்கான தனி இடத்தை பிடித்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் அவருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே காதல் மலர்ந்தது.

சுமூகமான வாழ்க்கை: அந்தக் காதலுக்கு அமிதாப் வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் நடிக்க அபிஷேக் முழு சம்மதம் கொடுத்திருக்கிறார். சமீபகாலமாக அவர்களுக்குள் பிரச்னை என்றும் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்றும் தொடர்ந்து தகவல்கள் பரவின. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள்.
கிளம்பிய சர்ச்சை: இது ஒருபக்கம் இருக்க கடந்த வருடம் அவரது நடிப்பில் I Want To Talk படம் வெளியானது. அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். ஆனால் அந்த விருதை அவர் தனது செல்வாக்கை வைத்து வாங்கியிருப்பதாக சோஷியல் மீடியாக்களில் ஒருதரப்பினர் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்திருக்கிறார்.
அபிஷேக் விளக்கம்: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரு விஷயத்தை நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். நான் எந்த விருதையும் பிஆர் வேலைகள் செய்தோ, பணம் கொடுத்தோ வாங்கியதில்லை. நான் செய்ததெல்லாம் கடின உழைப்புதான். ரத்தம்,வியர்வை, கண்ணீர் சிந்தியிருக்கிறேன். ஆனால் நான் சொல்வதை நீங்கள் நம்பப்போவதில்லை என்றும் எனக்கு தெரியும். அதனால் உங்களை அமைதிப்படுத்த சிறந்த வழி என்னவென்றால் இன்னும் கடினமாக உழைப்பதுதான். அப்போதுதான் எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் எந்த விருதையும், நான் செய்யப்போகும் சாதனையையும் நீங்கள் சந்தேகப்படமாட்டீர்கள். உங்கள் நினைப்பை நான் தவறென்று நிரூபிப்பேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











