சொன்னேன்ல.. கொரோனாவை முறியடிப்பேன்னு.. ஒருவழியாக குணமான அபிஷேக் பச்சன்.. உற்சாக ட்வீட்!
மும்பை: பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.
கடந்த மாதம் நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா என ஒட்டுமொத்த குடும்பத்துக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
ஐஸ்வர்யா ராய், ஆரத்யாவை தொடர்ந்து சமீபத்தில் அமிதாப் பச்சனும் குணமடைந்தார். இந்நிலையில், தற்போது அபிஷேக் பச்சனும் குணமாகி உள்ளார்.

அமிதாப் பச்சன் குடும்பம்
அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் கடந்த மாதம் ஜூலை 11ம் தேதி மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர். அதன் பின்னர், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி
கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜூலை 12ம் தேதி நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரும் அதே நானாவதி மருத்துவமனையில் தனித் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அமிதாப் பச்சன் குடும்பத்துக்கே கொரோனா பரவியதை அறிந்த இந்திய பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் அவர்கள் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

கொரோனாவை எட்டி உதைத்த அமிதாப்
ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யாவுக்கு லேசான தொற்று இருந்த நிலையில், அவர்கள் முதலில் குணமாகி வீடு திரும்பினர். பின்னர், கொரோனா பாதிப்பில் இருந்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று வாரங்களுக்கு பிறகு, கொரோனா நெகட்டிவ் ஆனதை அடுத்து, அவரும் பரிபுரணமாக கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினார். கொரோனாவை எட்டி உதைப்பது போன்ற போஸ்ட்டையும் இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார்.

அபிஷேக் பச்சன்
கொரோனாவில் இருந்து நடிகர் அமிதாப் பச்சனே மீண்ட நிலையிலும், அவரது மகன் அபிஷேக் பச்சன் கொரோனாவில் இருந்து மீளவில்லை. இவர் மூலமாகத்தான் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கொரோனா பரவியதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், தற்போது, பிராமிஸ்னா பிராமிஸ்தான்.. சொன்னேன்ல.. கொரோனாவை முறியடிப்பேன்னு.. என உற்சாகமாக ட்வீட் போட்டு, தனக்கு கொரோனா நெகட்டிவ் ஆன சந்தோஷமான செய்தியை பதிவிட்டு தனது ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











