பறந்த கார்.. உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர்.. ராஜீ அண்ணா எழுந்திரினா? படப்பிடிப்பு தள விபத்து காட்சி!
சென்னை: பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் 'வேட்டுவம்' படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார். கார் மேலே பறந்து கீழே விழுந்ததில் ஸ்டண்ட் மாஸ்டர் சுயநினைவு இழந்து கிடந்தார், அவர்களை அருகில் இருந்த படக்குழுவினர் மீட்கும் காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு தங்கலான் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விக்ரம், பசுபதி, பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது ரஞ்சித் 'வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், நடிகர் ஆர்யா வில்லனாக நடித்து வருகின்றனர். மேலும், அசோக் செல்வன், பகத் பாசில் ஆகியோரும் இப்படத்தில் கமிட்டாகி உள்ளனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்: வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு 10ந் தேதியில் இருந்து , நாகப்பட்டினம், கீழையூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில், காஞ்சிபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்ற 52 வயதான ஸ்டண்ட் மாஸ்டர் பணியாற்றி வந்தார். நேற்று சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அதில், கார் ஒரு இடத்தில் மோதி வேகமாக பறக்க வேண்டும், அந்த காட்சியில், கார் தவறுதலாக சென்றதில், காரில் இருந்த மோகன் ராஜ் உயிரிழந்தார்.. இதையடுத்து, அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்ததைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பதபதக்கும் காட்சி: தற்போது, அந்த விபத்து நடந்த காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மோகன்ராஜ் இருந்த கார், ஒரு மண் மேடுமீது மோதி, இரண்டு, மூன்று சுற்று சுற்றி பின் கீழே விழுகிறது. அந்த காருக்கும் இருக்கும் மோகன் ராஜ் வெளியே வராததால், ஏதோ தவறு நடந்தை புரிந்து கொண்ட மற்ற கலைஞர்கள், காரின் அருகே ஓடிச்சென்று, ராஜீ அண்ணா எழுந்திரினா.. எழுந்திரினா... என கத்தி அவரை எழுப்புகின்றனர். ஆனால், எந்தவிதமான அசைவும் இல்லாமல் இருக்கிறார். இந்த காட்சியைப்பார்த்த இணையவாசி ஒருவர், உண்மையில் இந்த சீன்கள் தமிழகத்துக்கு தேவைதானா? சமகாலத்தில் இதை சாலையில் பண்ண முடியுமா? செய்தால் வழக்கு பாயும், அப்ப இளந்தலைமுறைக்கு எதை காட்டுகிறீர்கள். அவசியமான காட்சி தாண்டி வன்முறை தவிர்க்கிற கதையை தாருங்கள். கிரியேட்டர்களை கொண்டாடுற தலைமுறையை மாற்றுங்கள் என பலர் ஆதங்கத்தை கொட்டிதீர்த்து வருகின்றனர்.
தாங்க முடியாத சோகம்: ஸ்டேண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் மரண செய்தி கேட்டு உடைந்து போன நடிகர் விஷால், தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், படப்பிடிப்பில் ஏற்பட்ட கார் விபத்தில், காட்சியில் ஸ்டண்ட் கலைஞர் ராஜு காலமானார் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. ராஜுவை பல வருடங்களாக எனக்கு தெரியும். அவர் என் படங்களில் பல ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளை மீண்டும் மீண்டும் செய்து காட்டுவார். ஏன் என்றால், அவர் மிகவும் துணிச்சலான மனிதர். அவரது மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது, எனது ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications











