Jason Sanjay: விஜய் இல்லாமல் நடந்து முடிந்த சஞ்சய் படத்தின் பூஜை.. விரைவில் சூட்டிங்!
சென்னை: நடிகர் விஜய் அடுத்தடுத்த வெற்றிப்பட இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து படங்களை கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து விஜய் கொடுத்திருந்த லியோ படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்திற்காக கூட்டணி அமைத்து நடித்து வருகிறார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமாகி சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தளபதியாக அவர்களது இதயத்தில் நிரந்தர இடம் பெற்றுள்ளார். விஜய்யின் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சாதனை செய்துள்ளது. இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். முன்னதாக இந்தக் கூட்டணி மாஸ்டர் படத்திலும் இணைந்திருந்தது.
தளபதி 68 படம்: தற்போது தளபதி 68 படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங், சென்னை, தாய்லாந்து ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. விஜய் அரசியலிலும் ஈடுபடவுள்ளதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலில் இவரது பங்களிப்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான பல நடவடிக்கைகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார். தளபதி 68 படத்தை தொடர்ந்து அரசியலில் ஈடுபடும் வகையில் நடிப்பிற்கு சில காலங்கள் அவர் இடைவெளி விடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டைரக்டராக அறிமுகமாகும் விஜய் மகன்: விஜய்யின் மகன் சஞ்சய்யும் தற்போது சினிமாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவர் தன்னுடைய தந்தையின் வேட்டைக்காரன் படத்தில் நா அடிச்சா தாங்க மாட்ட பாடலில் முன்னதாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார். தொடர்ந்து இவர் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் சஞ்சய்யை நாயகனாக அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார்.
இயக்குநராகும் ஆசை: ஆனால் தான் நடிகராக இல்லாமல் இயக்குநராக மாற விரும்புவதாக சஞ்சய் உறுதியாக கூறிவிட்டார். இந்நிலையில் சில குறும்படங்களையும் இயக்கியுள்ள சஞ்சய், தற்போது லைகா தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கொள்ளைக் கொண்டது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சஞ்சய் படத்தின் பூஜை: இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜையை சைலண்டாக லைகா நிறுவனம் போட்டுள்ளது. போயஸ் கார்டனில் போடப்பட்டுள்ள புதிய அலுவலகத்தில இந்தப்படத்தின் பூஜை நடந்துள்ளது. இந்தப் பூஜையில் விஜய் பங்கேற்காத நிலையில் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இதனிடையே படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கும் என்றும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











