அல்லு அர்ஜுன் பால் குடிக்கும் குழந்தையா? ஜாமீன் ரத்து செய்யப்படும்.. எச்சரித்த ஏசிபி!
ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரீமியம் காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண்ணும், அவரது 9 வயது குழந்தை மூளைசாவடைந்து கோமாவில் சிகிச்சைப் பெற்று வருவதும் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அல்லு அர்ஜூன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில், ஏசிபி விஷ்ணுமூர்த்தி அவரை கடுமையாக எச்சரித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜுன், மூன்று ஆண்டுகள், ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும், அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று மிகவும் சிரமப்பட்டு புஷ்பா2 படத்தில் நடித்தேன். இதனால், படத்தை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்க திரையரங்கு சென்றேன். கடந்த 20 ஆண்டுகளாக 30 சினிமா வெளியானபோது. முதல் நாளே அதே தியேட்டரில் சென்று படம் பார்த்துள்ளேன். ஆனால் இந்த முறை யாரும் எதிர்பாராத விபத்து நடந்துள்ளது.

கூட்டம் அதிகமாக இருந்தால் போலீசார், அவர்களை நோக்கி கை காட்டினால் சென்றுவிடுவார்கள் என்று சொன்னார்கள். இதனால், கை காட்டிவிட்டு சென்றுவிட்டேன். ஆனால், படம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே கூட்டம் அதிகமாக இருக்கிறது என்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்படுவதால், வெறுயேறும்படி பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே அங்கிருந்து நான் எனது மனைவி குழந்தைகளுடன் சென்றுவிட்டேன். ஆனால், இந்த நெரிசலில் சிக்கி, ஒரு ரசிகை இறந்ததும் அவரது மகன் கோமா நிலைக்கு சென்றதும் எனக்கு மறுநாள் காலை தான் தெரியவந்தது. இந்த தகவலை அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் என்று பேசி இருந்தார்.
ஏசிபி விஷ்ணுமூர்த்தி: இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஏசிபி விஷ்ணுமூர்த்தி, சந்தியா தியேட்டர் நெரிசல் மற்றும் அல்லு அர்ஜுன் கைது குறித்தும்,கடந்த 15 நாட்களாக போலீசார் மீது பல விதமான குற்றச்சாட்டுக்களை கூறிவருகின்றனர். நீதிமன்றத்தின் முன் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நடிகர், விசாரணையை பாதிக்கும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர் என்னவோ நீதிபதி போல, இது தற்செயலானது, யாருடைய தவறும் இல்லை என்றும் ஊடகங்களுக்கு முன் பேசி இருக்கிறார். உண்மையில், குற்றம் சாட்டப்பட்டவர் பிரஸ் மீட் நடத்தக்கூடாது இதை, நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பால் குடிக்கும் குழந்தையா: மாநிலத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் போலீசார் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். ஒரு நிகழ்ச்சிக்கு பந்தோபஸ்த் ஏற்பாடு செய்ய வேண்டுமானால், கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பே அதற்காக பிளான் போடப்படும், எமர்ஜென்சி என்றால், அந்த நேரத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால், நாங்கள் பேப்பர் கொடுத்தோம், எங்களுக்கு அனுமதி கிடைத்ததா? கிடைக்கவில்லையா என்று தெரியாது என்பது போல் நடிப்பது ஏற்புடையதல்ல. அல்லு அர்ஜூன் ஒன்றும் பால் குடிக்கும் குழந்தை இல்லை, அவருக்கு 40 வயதாகிறது. அப்படிப்பட்டவர் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
நாங்களும் மனிதர்கள் தான்: இந்த விஷயத்தில் போலீஸ் அதிகாரிகள் மீது சிலர் கற்களை வீசி வருகிறார்கள். நாங்கள் 10 நிமிடம் எங்கள் கடமையை ஒதுக்கிவைத்தால், உங்கள் வாழ்க்கை என்னவாகும் என்பதை யோசித்துப்பாருங்கள். எல்லோரும் பண்டிகையை கொண்டாடினால், போலீசார் சாலைகளில் இருப்பார்கள், அவர்கள் சமுதாயத்திற்காக பாடுபடுவார்கள், நாங்களும் மனிதர்கள் தானே, அல்லு அர்ஜுன் பொறுப்புள்ள குடிமகனாக நடந்து கொள்ளவில்லை.


Click it and Unblock the Notifications











