ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’.. ஏஜிஎஸ் தயாரிப்பில் செம என்டர்டெயின்மென்ட் படம் ரெடி!
சென்னை: ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 28-வது திரைப்படமாக, 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள குடும்ப ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'பிளாஸ்ட்'. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இதைத் தயாரித்துள்ளனர். 'கோட்', 'லவ் டுடே' போன்ற வெற்றிப் பட வரிசையில் ஏஜிஎஸ் வழங்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
'பிளாஸ்ட்' குறித்துப் பேசிய இயக்குநர் சுபாஷ் கே. ராஜ், "அனைத்துத் தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஆக்ஷன் திரைப்படம் இது. தாய், தந்தை, மகள் கொண்ட ஓர் அன்பான குடும்பத்திற்கும், தீமையையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு பயங்கர கும்பலுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களே இதன் மையக்கரு," என்றார். படத்தின் தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

பிரதீப் ரங்கநாதனின் உதவியாளரான சுபாஷ் கே. ராஜ், "எனது முதல் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து, ஆக்ஷன் கிங் அர்ஜுனை இயக்கியது மிகப்பெரிய வாய்ப்பு," என்று மகிழ்ச்சி தெரிவித்தார். இப்படத்திற்கு அவரே கதை, திரைக்கதை, வசனத்தையும் எழுதியுள்ளார். ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹாசன் போன்றோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் 'பிளாஸ்ட்' மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் எடிட்டிங் பணிகளை கையாண்டுள்ளார். வீரமணி கணேசன், பீனிக்ஸ் பிரபு, தினேஷ் மனோகரன் ஆகியோர் கலை இயக்கம், சண்டைக் காட்சிகள், ஆடை வடிவமைப்புக்கு பொறுப்பேற்றுள்ளனர். அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி, எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் ஆகியோர் கிரியேட்டிவ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்களாகச் செயல்பட்டுள்ளனர்.
'பிளாஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த குடும்ப ஆக்ஷன் திரில்லர், விரைவில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications