பள்ளி மாணவர்கள் கூல் லிப் போடுறாங்க.. குடிக்காதவர்களை பார்த்தால் சிரிக்கறாங்க - ஆரி அர்ஜுன் வேதனை!
சேலம்: தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் கூல் லிப் என்ற போதைப்பொருளைப் பயன்படுத்துகின்றார்கள் என நடிகர் ஆரி வேதனையுடன் தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, நடிகர் ஆரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை அவர்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனும் கலந்து கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், புற்றுநோய் கதிரியக்க இயந்திரத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுன் மற்றும் கிரிக்கெட் வீரர் நடராஜன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர். அதில் நடிகர் ஆரி அர்ஜுன் பேசும்போது, "பள்ளி பருவத்தில் மைதானத்தில் வானம் பார்த்து விளையாடுவோம். அதன் பிறகு ஷாப்பிங் போகும்போது மட்டுமே வானத்தை பார்ப்பதைப்போல் பார்க்கின்றோம். ஆனால் நாம் அனைவரும் வானம் பார்த்த பூமி போல எப்போதும், வானம் பார்த்து விளையாட வேண்டும்.

ஆரோக்யம்: ஆரோக்கியமான வாழ்வு அமைய வேண்டும் என்றால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மட்டுமின்றி உடற்பயிற்சியும் மிகவும் முக்கியம். நாள்தோறும் உடற்பயிற்சி செய்தால் மருத்துவமனைகளுக்கு வரவேண்டிய கட்டாயம் இருக்காது. ஒரு வாகனம் சரியாக இயங்குவதற்கு எரிபொருள் மற்றும் அதனை மெயிண்டனன்ஸ் எவ்வளவு முக்கியமோ அதே போல் நமது வாழ்க்கை வளமாக அமைய உடலுக்கு உணவும் உடற்பயிற்சியும் மிகமிக முக்கியம். நாம் பணத்தை அதிகம் சம்பாதிக்கின்ற நோக்கில் ஆரோக்கியத்தை குறைத்து வருகிறோம்.

கூல் லிப்: இன்றைய காலகட்டத்தில் குடிக்கிற சமூகம் அதிகமாகி விட்டதால் குடிக்காதவர்களை பார்த்தால் காமெடியனாக தெரிகின்றது. ரீல்ஸ் எடுக்க தெரிந்தவர்களை தான் இன்றைய பெண்கள் கணவனாக தேர்வு செய்கிறார்கள் ஷார்ட்ஸ், செல்ஃபி, ஸ்மார்ட் போன் ஆகியவற்றை ஆண்கள் எந்த அளவிற்கு கையாளுகின்றார்கள் என்பதை கருத்தில் கொண்டுதான் பெண்கள் தங்கள் மனதை பரிகொடுகின்றனர். பள்ளி மாணவர்கள் அதிகமாக கூல் லிப் என்ற புகையிலையைப் பயன்படுத்துகிறார்கள். அடுத்த தலைமுறையில் பள்ளிகளிலேயே மாபியா உருவாகிவிடுமோ என்ற பயம் இயல்பாகவே மனதில் ஏற்படுகின்றது. இதனைத் தடுக்கவேண்டும் என்றால், பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என பேசினார். நடிகர் ஆரியின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடராஜன்: அதேபோல், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசுலையில், "நமது ஊரில் உணவுக்கு பஞ்சமே இல்லை. எல்லா நல்ல மற்றும் தரமான உணவுகளுமே நமக்கு சுலபமா கிடைக்கும். என்னை பொறுத்த வரைக்கும் அம்மா சமைக்கும் சாப்பாடு தான் உலகத்திலேயே மிகச்சிறந்த உணவு. என்னைப் பொறுத்தவரையில் உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆறு நாள் உடற்பயிற்சியில் நான் ஈடுபட்டு வருகின்றேன். எனக்கு அறுவைச் சிகிச்சை முடிந்து மூன்று வருடங்கள் ஆகின்றது. ஆனாலும் நான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறேன்.
கவனம்: கத்தி உடம்பில் பட்ட (அறுவைச் சிகிச்சையைக் குறிப்பிடுகின்றார்) பிறகு பழைய உடல்நிலை இல்லை. இதுபோன்ற நிலைக்கு இடம் கொடுக்காமல் அனைவரும் நாள்தோறும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அனைவரும் கெரியரில் கவனம் செலுத்திவிட்டு உடல் நலனில் அக்கறை செகுத்துவதில்லை. நாள்தோறும் உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. உடற்பயிற்சி செய்யத்தொடங்கும் போது தொடக்கத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும், ஆனால் அதையே ஒரு வாரம் தொடர்ச்சியாக செய்துவிட்டால் சுலபமாகிவிடும்" என பேசினார்.


Click it and Unblock the Notifications











