Abbas: மீண்டும் தமிழில் களமிறங்கும் காதல் தேசம் நாயகன்.. பெரிய பேனர்லதான் நடிக்கிறாரு!
சென்னை: நடிகர் அப்பாஸ் தமிழில் காதல் தேசம் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். வினீத், தபு உள்ளிட்டவர்களுடன் இவர் நடித்த இந்தப் படம் காதலை மட்டுமில்லாமல் நட்பையும் பேசியது. இயக்குநர் கதிர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய என்ட்ரியை அப்பாஸுக்கு கொடுத்தது.
தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் தனி ஹீரோவாக இவரால் ஜொலிக்க முடியவில்லை. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அப்பாஸுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலானார்.

நடிகர் அப்பாஸ்: நடிகர் அப்பாஸ் 90களின் காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நடிகர்களில் ஒருவர். தன்னுடைய என்ட்ரி படமான காதல் தேசத்தில், என்னை காணவில்லையே நேற்றோடு என்று இவர் ஸ்டைலிஷ்ஷாக நடைபோட ரசிகர்களின் குறிப்பாக ரசிகைகளின் மனமும் அவர் பின்னாலேயே நடந்ததை பார்க்க முடிந்தது. இந்தப் படத்தில் இரு நண்பர்கள் ஒரே பெண்ணை காதலிக்க அதனால் அவர்கள் நட்பில் ஏற்படும் பிரச்சினையை கதைக்களமாக கொண்டிருந்தார் இயக்குநர் கதிர். இந்தப் படத்தில் வினீத், தபு என தேர்ந்தெடுத்த நடிகர்களின் நடிப்பும் பலமாக அமைந்தது. ஏஆர் ரஹ்மானின் இசையும் படத்திற்கு கூடுதல் சிறப்பாக இருந்தது.
அடுத்தடுத்த படங்கள்: இந்நிலையில் முதல் படம் கொடுத்த அட்டகாசமான அறிமுகத்தால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடனும் இயக்குநர்களுடனும் இணைந்து நடித்தார் அப்பாஸ். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இவர் இணைந்த முன்னணி நடிகர்களின் பட்டியல் நீளம், ரஜினிகாந்துடன் படையப்பா, கமல்ஹாசனுடன் வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஹேராம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் மம்முட்டி உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஆனந்தம், பூவேலி, விஐபி, பூச்சூடவா உள்ளிட்ட படங்களிலும் அப்பாஸ் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அப்பாஸ் ரீ-என்ட்ரி: தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் அப்பாஸுக்கு சரியாக கைக்கொடுக்காத நிலையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு தொடர்ந்து அமையவில்லை. இதையடுத்து குடும்பத்தினருடன் வெளிநாட்டில் செட்டிலானார். துவக்கத்தில் பெட்ரோல் பங்க் ஹோட்டல் போன்ற இடங்களிலும் தான் வேலை செய்ததாக சமீபத்தில் அப்பாஸ் கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார். பிரபலமான ஒரு நடிகர் இத்தகைய வேலைகளை செய்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் இருந்த அப்பாஸ் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
புஷ்கர் -காயத்ரி தயாரிப்பில் அப்பாஸ்: பிரபல இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் சற்குணம் டைரக்ஷனில் உருவாகிவரும் வெப் தொடரில் தற்போது அப்பாஸ் நடித்து வருகிறார். எக்ஸாம் என்று இந்த வெப் தொடருக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரில் அப்பாஸுடன் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.10 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்தாலும் புஷ்கர் -காயத்ரி தயாரிப்பில் அப்பாஸ் இணைந்துள்ளார். இந்த ரீ என்ட்ரி அப்பாஸுக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











