ஆபாச போட்டோக்களை காட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: டிவி நடிகர் கைது
மும்பை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொலைக்காட்சி நடிகர் அபிநவ் கோஹ்லி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் அபிநவ் கோஹ்லி(39). அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக பெண் ஒருவர் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவர் தன் புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
அபிநவ் கோஹ்லி மாடல் அழகிகளின் ஆபாச படங்களை செல்போன் மூலம் எனக்கு காட்டினார். கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததுடன் அசிங்கமாக பேசி வந்தார்.
மேலும் என்னை அடித்து துன்புறுத்தியுள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று அவர் என்னையும், என் அம்மாவையும் மிரட்டியுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணின் அம்மாவும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஞாயிற்றுக்கிழமை இரவு அபிநவ் கோஹ்லியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக அபிநவ் கோஹ்லி தனது மனைவியும், நடிகையுமான ஸ்வேதா திவாரியையும், அவரின் முதல் திருமணம் மூலம் பிறந்த மகளான பாலக்கையும் அடித்து துன்புறுத்தியுள்ளார் என்று புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











