'மொத நாள் எதிர்த்தா அடுத்த நாள் ரெய்டா... தரங்கெட்ட பிழைப்பு இது' - அரசியல்வாதிகளை வெளுக்கும் நடிகர்
Recommended Video

சென்னை : 'இந்த தரங்கெட்ட செயல் அரசியலில் அவர்களுக்குப் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்' எனப் பேசியுள்ளார் நடிகர் அருள்தாஸ்.
சுசீந்திரன் இயக்கத்தில் 'மாநகரம்' சந்தீப், விக்ராந்த் ஆகியோர் நடிக்கும் 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய நடிகர் அருள்தாஸ் மத்திய அரசையும், பா.ஜ.க-வினரையும், திரையுலகினரை ஒடுக்க நினைப்பவர்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

ஜாதி - மதம்
"ஜாதி, மதம் ஆகியவை இல்லாத துறை சினிமாத்துறை. சமீபமா எதையாவது பேசினா ஜாதியை இழுத்துடுறாங்க. இப்ப 'மெர்சல்' படத்தில் விஜய் பேசின வசனங்களுக்காக அவர் மதத்தையும் இழுத்து ட்விட்டர்ல போடுற அளவுக்கு கேவலமான முறையைக் கையாள ஆரம்பிச்சிட்டாங்க அரசியல்வாதிகள்.

தரங்கெட்ட செயல்
இது மிக தரங்கெட்ட ஒரு செயல். சினிமாவுக்கு ஜாதி, மதம், மொழி இல்லை. ஆனால், அதைச் சொல்லி மனிதர்களைப் பிரிக்கும் சூழ்ச்சியைப் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவர்களுக்கு விஷால் ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கிறார். அடுத்த நாள் அவர் வீட்டில் ஒரு ரெய்டு நடக்குது. எங்க போய்க்கிட்டு இருக்குனு தெரியலை. இதை சினிமாவை நசுக்குற முயற்சியாதான் நான் பார்க்கிறேன்.

அடையாள அட்டை
இதன்மூலமா அவங்களோட கீழ்த்தரமான செயல்தான் வெளிப்படுது. இது அவங்களுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தும்ங்கிறதை உணர மாட்டேங்கிறாங்க. விஜய்யோட தனிப்பட்ட அடையாள அட்டையை பொதுவெளியில் போடுறாங்க. அவங்க அடையாள அட்டையை இப்படிப் போடுவாங்களா

வரி கட்டுவதில்லையா
வரி கட்டுபவர்கள் அதிகமாக இருப்பதே சினிமாத்துறையில்தான். சம்பளம் கொடுக்கும்போதே தயாரிப்பாளர்கள் வரியைப் பிடித்துக்கொண்டுதான் கொடுப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகளின் வருமானத்தை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். சினிமாத்துறையினர் வரி கட்டுவதில்லை என அரசியல்வாதிகள் பேசுகிறார்கள்.

மெர்சல் சர்ச்சை
உலகிலேயே அதிக ஜி.எஸ்.டி வாங்குறது நம்ம நாட்டில்தான். அந்தக் கருத்தை 'மெர்சல்' படத்தில் பதிவு பண்ணியிருக்காங்க. மருத்துவமனை இன்குபேட்டரில் குழந்தையை எலி கடிச்சது உண்மை. அதைத்தான் படத்தில் வைக்குறாங்க. ஆனால் அதைச் செய்யக்கூடாதுனு சினிமாவில் இருப்பவர்களை அடக்க நினைக்கிறார்கள் அரசியல்வாதிகள்." எனப் பேசினார் அருள்தாஸ்.


Click it and Unblock the Notifications











