கே.ஜி.எஃப் 3 படத்தில் அஜித்! சுத்தப் பொய்! ரசிகர்கள் மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போட்ட பிரபலம்!
சென்னை: இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி காலை முதல் மிகவும் விறுவிறுப்பாக இணையத்தில் உலா வந்த தகவல் என்றால் அது கே.ஜி.எஃப் படத்தினை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல், அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாகவும், அதற்கு முன்னதாக கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகத்தில் அஜித் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இது மட்டும் இல்லாமல் பல முன்னணி ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டு இருந்தது. தற்போது சினிமா பத்திரிகையாளர்களான அந்தனன், பிஸ்மி மற்றும் சக்திவேல் நடத்தி வரும் வலைபேச்சு யூட்டூப் சேனலில் இந்த தகவலை பொய் எனக் கூறியுள்ளனர்.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள படப்பிடிப்பினை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடத்திட படக்குழு திட்டமிட்டு வருகின்றது. அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த மாதம் முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பி ஜப்பானில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

கே.ஜி.எஃப் படத்தின் முதல் இரண்டு பாகங்களை இயக்கி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் கர்நாடக சினிமா மீது கவனம் செலுத்த வைத்தவர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படமான சலார் படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதனால் இவரது கவனம் மீண்டும் கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாவது பாகத்தின் மீது விழுந்திருப்பதாக கூறப்படுகின்றது.
கே.ஜி.எஃபில் அஜித்: இந்நிலையில் நடிகர் அஜித்தை கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாவது பாகத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜித்தை அணுகியதாகவும், அதற்கு அஜித் தரப்பில் இருந்தும் ஓ.கே சொல்லப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இது மட்டும் இல்லாமல், கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாவது பாகத்திற்குப் பின்னர் அஜித்தை வைத்து பிரசாந்த் நீல் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் உலாவந்தது. இது தொடர்பாக செய்தித்தாள் ஒன்றில் செய்தி வெளியாக தகவல் காட்டுத்தீ போல பரவியது.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்: குறிப்பாக அஜித் ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்டனர். பிரசாந்த் நீல் படத்தில் அஜித் நடிக்கின்றார் என்றால் கட்டாயம் அது கேங்ஸ்டர் படமாகத்தான் இருக்கும் என ஆளாளுக்கு கதை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துக் கொண்டு இருந்த நடிகர் அஜித் குமார் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமான தகவலை, பிரபல சினிமா பத்திரிகையாளர்களான வலைபேச்சு அந்தனன், பிஸ்மி மற்றும் சக்திவேல் கூறியுள்ளனர்.
அதிருப்தி: அவர்கள் கூறிய தகவலில், நடிகர் அஜித் மற்றும் பிரசாந்த் நீல் ஆகியோர் இணைந்து படம் செய்யப்போவதாக வந்த தகவல் வதந்தியே. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. யாரோ பிரசாந்த் நீல் பெயரைத் தவறாக பயன்படுத்தியுள்ளனர். இதனால் கசிந்த விஷயத்தைதான் உண்மை என நம்பி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் எனக் கூறியுள்ளனர். இவர்கள் இவ்வாறு கூறியது அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரசாந்த் நீல் ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











