Ajithkumar: அஜித்துக்காக நாங்க எப்பவுமே இருப்போம்.. இணையத்தில் வெறியாக களமிறங்கிய ரசிகர்கள்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள தி கோட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் ரூபாய் 400 கோடி செலவில் படத்தினை தயாரித்துள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வசூல் செய்யும் படமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1100 திரையரங்குகளில் இப்படம் ரிலீஸ் ஆனது.
படம் ரிலீஸ்க்கு முன்னர் இருந்தே அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தி கோட். இந்தப் படத்தின் அறிவிப்பில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தின் ட்ரைலர் ரிலீஸுக்கு முன்னர் தொடங்கி படத்தின் ப்ரோமோஷன்களில் அஜித் பெயரைத்தான் அதிகம் பயன்படுத்தினார்கள். இதனால் ஊடகங்களுக்கு படக்குழுவினர் பேட்டி அளித்தபோது கூட, செய்தியாளர்களிடமும் அஜித் குறித்தே அதிகம் பேசினர். இதனால் விஜய் ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவிற்கு அஜித் ரசிகர்களுக்கும் இருந்தது.

குறிப்பாக, கோட் படம் மங்காத்தா படத்தைவிட 100 மடங்கு நன்றாக இருக்க வேண்டும் என அஜித் கூறினார், ட்ரைலரை பார்த்துவிட்டு நன்றாக உள்ளது என அஜித் கூறினார், படம் ரிலீஸ் ஆன தினத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த அஜித் சாருக்கு நன்றி என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுமட்டும் இல்லாமல், கோட் படத்தின் ப்ரோமோஷனுக்கு துபாய் சென்றபோதுகூட, குட் பேட் அக்லி படத்தின் டீ-சர்ட்டை அறிமுகம் செய்து வைத்தார்.

மங்காத்தா: இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, படத்தின் க்ளைமேக்ஸில், நடிகர் விஜய் தனது மகள் கதாபாத்திரத்தைப் பார்த்து நீ யார் ஃபேன் என்ற கேள்வியை கேட்க, அவரும் தல ஃபேன் என பதில் சொல்லுகின்றார். அப்போது பின்னணியில் மங்காத்தா படத்தின் தீம் மியூசிக் இசைக்கப்படுகின்றது. இந்தக் காட்சியெல்லாம் திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் என இரு தரப்பினரும் கொண்டாடித் தீர்த்தனர்.

ஏ.ஜி.எஸ்: இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம், படத்திற்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டவர்களின் பதிவுகளை ரீ போஸ்ட் செய்து வந்தது. இதில், நடிகர் அஜித் குறித்து மிகவும் மோசமான வார்த்தைகளால் ஒருவர் குறிப்பிட்டிருந்த பதிவையும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் ரீ போஸ்ட் செய்திருந்தது.

இது அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனால் எக்ஸ் பக்கத்தில் உள்ள அஜித் ரசிகர்கள், ஏ.ஜி.எஸ் நிறுவனத்தையும் அதன் உரிமையாளர்களையும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தி கோட் படத்தை அஜித் ரசிகர்கள் புறக்கணிப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர். இதனால்தான் படத்தின் வசூல் முதல் நாளைப் போல் அடுத்த இரண்டு நாட்களில் இல்லை எனவும் கூறப்படுகின்றது.

ரசிகர்கள்: அஜித் தனது ரசிகர் மன்றத்தைக் நீக்கி சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படி இருக்கும்போதும் கூட அவரை யாராவது இழிவு படுத்தினால், ரசிகர்கள் இந்த அளவிற்கு திரண்டு வந்து, அஜித்திற்கு ஆதரவாக நிற்பது திரைத்துறையில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு கண்டனங்களைத் தெரிவித்துவரும் அஜித் ரசிகர்கள், சமூக வலைதளங்கள் இருக்கும் இந்தக் காலத்திலேயே அஜித்திற்கு இந்த அளவிற்கு தூரோகம் செய்ய முடிகின்றது என்றால், இணையமே வளராத காலத்தில் அவருக்கு என்ன மாதிரியெல்லாம் அநீதி நடந்திருக்கும் எனவும் கேள்வி எழுப்புகின்றனர். அதேபோல், அஜித்திற்காக நாங்கள் எப்போதும் இருப்போம் எனவும் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











