H Vinoth: பிறந்த நாள் கொண்டாடும் துணிவு நாயகன்.. அஜித்தை அசர வைத்த இயக்குநர்!
சென்னை: கோலிவுட்டில் தன்னை முன்னணி இயக்குநர்களில் ஒருவராக நிலை நிறுத்தியுள்ளார் ஹெச் வினோத். இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சதுரங்க வேட்டை படத்தில் துவங்கிய இவரது வெற்றிப் பயணம் தொடர்ந்து அஜித்தின் அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

அடுத்ததாக உலகநாயகன் கமலையும் இயக்க கமிட்டாகியுள்ளார் ஹெச் வினோத். தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்துவரும் கமல்ஹாசன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணிவு பட இயக்குநர் ஹெச் வினோத் பிறந்தநாள் இன்று: நடிகர் நட்ராஜை லீட் கேரக்டரில் வைத்து ஹெச் வினோத் தன்னுடைய அறிமுகப் படத்தை இயக்கியிருந்தார். எந்தவிதமான பரபரப்பும் எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் இந்தப் படம் வெளியானது. ஆனால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பான வரவேற்பையும் நல்ல வசூலையும் குவித்தது. சுவாரஸ்யமான கதைக்களத்தை இந்தப் படத்தின்மூலம் கொடுத்திருந்தார் ஹெச் வினோத். முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி லீட் கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக நடித்து வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் கொள்ளையை மையமாக வைத்தே கதைக்களத்தை உருவாக்கியிருந்தார். வடமாநில கொள்ளையர்களை கொண்டு உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வெளியான இந்தப் படமும் சூப்பர் ஹிட்டடித்தது. கார்த்தி கேரியரில் பெஸ்ட் படங்களில் தீரன் படமும் ஒன்று. இந்தப் படத்தில் மிடுக்கான கார்த்தியை பார்க்க முடியும்.

இந்தப் படங்களை தொடர்ந்து தன்னுடைய ஸ்டார் வேல்யூவை அதிகரித்திருந்த ஹெச் வினோத்திற்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்கை தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தின்மூலம் கொடுத்திருந்தார் ஹெச் வினோத். இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் அஜித்திற்கு இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து அஜித்தை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பையும் ஹெச் வினோத்திற்கு இந்தப் படம் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து அஜித்தின் வலிமை, துணிவு படங்களையும் இயக்கினார் ஹெச் வினோத். இந்தப் படங்களும் கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவான படங்கள்தான். படங்களில் கொள்ளையுடன் கூடிய சமூக அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான துணிவு படத்தில் வங்கிக் கொள்ளையையும் வங்கிகளின் கொள்ளையையும் மையமாக கொண்டு கதைக்களத்தை உருவாக்கியிருந்தார் ஹெச் வினோத்.
அஜித்தின் மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்கி ஹாட்ரிக் வெற்றியை உறுதி செய்துள்ள ஹெச் வினோத்திற்கு அடுத்ததும் ஜாக்பாட் கிடைத்துள்ளது. அடுத்ததாக கமல்ஹாசனை அவரது தயாரிப்பிலேயே இயக்கவுள்ளார் ஹெச் வினோத், தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் பிசியாக உள்ள கமல்ஹாசன், அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் இணையவுள்ளார். தன்னுடைய அழுத்தமான டயலாக்குகள், சிறப்பான காட்சி அமைப்புகள், தேர்ந்த திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள ஹெச் விநோத் இந்தப் படத்திலும் தன்னுடைய முத்திரையை பதிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இன்றைய தினம் பிறந்தநாள் காணும் ஹெச் வினோத்திற்கு பிலிமிபீட் சார்பில் நாமும் வாழ்த்துக்களை பகிர்வோம்.


Click it and Unblock the Notifications











