Ajithkumar: துணிவு மட்டுமில்லீங்க பணிவும்கூட தான்.. ரசிகருடன் கைகுலுக்கிய அஜித் வீடியோ!
சென்னை: நடிகர் அஜித்குமார் அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். மகிழ் திருமேனி படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதத்திலேயே வெளியான நிலையில், நாளைய தினம் அஜர்பைஜானில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையொட்டி அஜித் உள்ளிட்ட விடாமுயற்சி டீம் அஜர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளனர். இதையொட்டி நடிகர் அஜித்தை சென்னை விமானநிலையத்தில் பார்க்க முடிந்தது.

சென்னை விமானநிலையத்தில் நடிகர் அஜித்: நடிகர் அஜித்குமார் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் அமராவதி படத்தில் துவங்கிய அஜித்தின் பயணம் தற்போது விடாமுயற்சி வரை நீண்டுள்ளது. இந்த 30 ஆண்டுகால திரைப்பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார் அஜித். தல என்று ரசிகர்களால் அவர் கொண்டாடப்பட்ட நிலையில், தனக்கு இதுபோன்ற பட்டங்கள் தேவையில்லை என்று உதறித் தள்ளினார். சினிமா மட்டுமில்லாமல் பைக் டூர்களிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
அஜித்தின் 62வது படமாக திட்டமிடப்பட்டுள்ள விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதம் அஜித்தின் பிறந்தநாளையொட்டி வெளியானது. முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்தப் படத்திலிருந்து அவர் விலகிய நிலையில், அடுத்ததாக இயக்குநர் மகிழ்திருமேனி இந்தப் படத்தில் கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போன நிலையில், நாளைய தினம் அஜர்பைஜானில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் ஒரே கட்டமாக அஜர்பைஜானில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து துபாயில் பாலைவனத்தில் ஒரு முக்கியமான ஃபைட் காட்சியும் தொடர்ந்து சென்னையில் சில தினங்கள் சூட்டிங்கும் திட்டமிடப்பட்டுள்ளன. இதையடுத்து சூட்டிங்கை நிறைவு செய்யும் படக்குழுவினர், அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளது. நாளைய தினம் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், படக்குழுவினர் அஜர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதையொட்டி சென்னை விமானநிலையத்தில் நடிகர் அஜித்தை பார்க்க முடிந்தது. ரசிகர் ஒருவர் ஆசையுடன் அஜித்திடம் கைகுலுக்க வந்த நிலையில், உற்சாகத்துடன் அவருடன் அஜித் கைகுலுக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எப்போதும் ரசிகர்களிடம் சுமூகமான போக்கை கையாண்டுவரும் அஜித், இந்த பயணத்தின்போதும் ஏராளமான ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்.
அஜித்தின் துணிவு படம் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் வெளியீடாக ரிலீசானது. இந்தப் படம் விஜய்யின் வாரிசு படத்துடன் மோதிய நிலையில், சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. இந்நிலையில் உடனடியாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு, படம் தீபாவளி ரிலீசாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் சூட்டிங் தள்ளிப் போயுள்ளது. இதனிடையே தன்னுடைய பைக் டூரின் ஒரு பகுதியையும் அஜித் நிறைவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











