Ajith Kumar: அக்டோபர் 4ல் துவங்கும் விடாமுயற்சி சூட்டிங்.. அபுதாபி செல்லும் அஜித்!
சென்னை: நடிகர் அஜித்குமார் -மகிழ்திருமேனி இணையும் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதத்தில் அஜித்தின் பிறந்தநாளையொட்டி வெளியானது. இந்தப் படத்தில் நாயகிகளாக த்ரிஷா, ஹுமா குரோஷி போன்றவர்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல சஞ்சய் தத், ஆரவ் உள்ளிட்டவர்களும் படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

அபுதாபியில் துவங்கும் அஜித்தின் விடாமுயற்சி பட சூட்டிங்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஜனவரியில் பொங்கல் ரிலீசாக வெளியாகி இந்த ஆண்டில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்த அறிவிப்பு கடந்த மே மாதத்தில் அவரது பிறந்தநாளையொட்டி வெளியானது. முன்னதாகவே இந்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாகிய நிலையில், படம் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.
ஆனால் முன்னதாக இந்தப் படத்தில் இயக்குநராக கமிட்டாகியிருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்குநராக இணைந்தார். தொடர்ந்து இந்தப் படத்தின் அறிவிப்பு டைட்டிலுடன் வெளியானது. இதையடுத்து படத்தின் சூட்டிங் உடனடியாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப்போனது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
அஜித் இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய சர்வதேச பைக் டூரை மேற்கொண்டு வந்தார். ஓமன், நார்வே என அவரது பயணங்கள் தொடர்ந்தன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார் அஜித். அவரது விடாமுயற்சி சூட்டிங்கிலும் அவர் பங்கேற்கவுள்ளார். படத்தின் சூட்டிங் தொடர்ந்து அபுதாபியில் நடைபெறவுள்ளதாகவும் இதையடுத்து துபாய், சென்னை போன்ற இடங்களில் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அபுதாபியில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் வரும் அக்டோபர் 4ம் தேதி துவங்கவுள்ளதாக பிரபல நாளிதழில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரே கட்டமாக 35 முதல் 40 நாட்கள் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னேற்பாடுகளை கவனிக்கும் வகையில் படக்குழுவினர் கடந்த 24ம் தேதியே அபுதாபி புறப்பட்டு சென்றுள்ளனர். அஜித் உள்ளிட்ட மற்ற படக்குழுவினர் சூட்டிங்கிற்கு இரு தினங்களுக்கு முன்பு அபுதாபி செல்லவுள்ளனர்.
படத்தில் அஜித்திற்கு ஜோடியில்லை என்றும் ஆனால் இரண்டு நாயகிகள் கமிட்டாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. த்ரிஷா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் சஞ்சய் தத் மற்றும் ஆரவ் ஆகியோரும் இணைந்துள்ளனர். லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் அனிருத்.


Click it and Unblock the Notifications











