மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அல்லு அர்ஜுன்.. போலீஸ் ஸ்டேஷன் விரைந்த தில் ராஜு!
ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோ, சந்தியா தியேட்டரில் நடந்தபோது இளம்பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இந்த சம்பவத்தில் தற்போது தெலங்கானா போலீசார் சந்தியா திரையரங்கம், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து இன்றைய தினம் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்தனர். அவர் காலை பிரேக்பாஸ்ட் கூட சாப்பிடாத நிலையில், அவர் அதற்கும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போலீஸ் வாகனத்திலேயே ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன் அதிகமான அளவில் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்துவருவதுடன் சர்வதேச அளவிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். அவரது அடுத்தடுத்த படங்கள் கவனத்தை ஈர்த்துவந்தாலும் கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் கூட்டணியில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 500 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் தாண்டிய நிலையில், இந்த வெற்றி கொடுத்த சந்தோஷத்துடன் படத்தின் இரண்டாவது பாகமும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரத்தில் இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது.
சந்தியா திரையரங்க சம்பவம்: ரிலீசுக்கு முந்தைய தினம் ஐதராபாத்தின் சந்தியா திரையரங்கில் இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது. இந்த ஷோவிற்கு முன்னறிவிப்பின்றி நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் வந்த நிலையில், விஷயம் கேள்விப்பட்டு, அவர்களை பார்க்க லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அங்கு கூடியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் சிலர் மயக்கம் போட்டு விழுந்த நிலையில், ரேவதி என்ற பெண்ணும் தன்னுடைய 9 வயது மகனுடன் மயங்கியுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் ரேவதி உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அல்லு அர்ஜுன் கைது: இதனிடையே இந்த விவகாரத்தில் தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்றைய தினம் நடிகர் அல்லு அர்ஜுனை அவரது வீட்டிற்கு சென்று கைது செய்தனர். இதையடுத்து அவர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் நடிகர் சிரஞ்சீவி அல்லு அர்ஜுனை பார்க்க வரவேண்டாம் என்று சிக்காத்பள்ளி காவல்நிலைய போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே தயாரிப்பாளர் தில் ராஜு போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். இதையடுத்து மருத்துவ பரிசோனைகளுக்காக செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு அல்லு அர்ஜுன் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பெருகும் ஆதரவு: இதனிடையே அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பாலிவுட்டில் வருண் தவான் உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்துள்ளனர். சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பிரபலங்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே திங்கட்கிழமை வரை அல்லு அர்ஜுனை கைது செய்யக்கூடாது ஏன்று அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











